சென்னை, புழல் மத்தியச் சிறையில் கடந்த அக்டோபர் 20, அன்று மாலையில் வழக்கம் போல் கைதிகள் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டது. அப்போது, கைதிகள் இருவர் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நேபாள விசாரணை கைதி சுஜித் மற்றும் போக்சோ வழக்கில் கைதாகி இருந்த மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் சிறையில் இருந்து தப்பியது தெரியவந்தது.
அவர்கள், சிறை வளாகத்தில் உள்ள 23 அடி உயர சுற்றுச்சுவரை தாண்டி குதித்துத் தப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சிறைத்துறையினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தப்பிச் சென்ற கைதிகளை தேடினர். இந்த புகாரின் அடிப்படையில், 14 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் கைதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டையில், புழல் மத்தியச் சிறையில் இருந்து தப்பியோடிய நேபாள கைதி சுதீப் போகதி (சுஜித்), சென்னை திருமங்கலம்/அண்ணா நகர்ப் பகுதியில் காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை மீண்டும் காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து தப்பி ஒட்டிய மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குன்றத்தூர் அருகே தனிப்படை போலீசாரிடம் சிக்கியுள்ளார். அவரை மீண்டும் புழல் சிறையில் அடைக்க போலீசார் ஆயத்தமாகி வருகின்றனர். புழல் சிறையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக முன்னதாக சிறைத்துறை டிஜிபி, ஏழு அதிகாரிகளை அலட்சியமாக செயல்பட்டதாக பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
