தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரிய கோவிலை கட்டிய, மாமன்னன் ராஜராஜசோழனின், 1041வது சதய விழா நேற்று (அக்.,21) தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று (அக்.,22) காலை, திருமுறை நுால்களை அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து, நுாற்றுக்கும் மேற்பட்ட ஓதுவாமூர்த்திகளுடன் வீதிஉலா நடந்தது.
தொடர்ந்து, தமிழக அரசு சார்பில், பெரியகோவில் வெளியே அமைந்துள்ள ராஜராஜசோழன் சிலைக்கு, தஞ்சாவூர் எம்.எல்.ஏ., விஜய்சரவணன், கலெக்டர் ரேவதி, அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், சதய விழா குழு தலைவர் சரவணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு, 138 அமைப்புகளை சேர்ந்தவர்கள், ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், இளநீர், வில்வஇலை, அரிசி மாவு, பழங்கள் உள்ளிட்ட 48 வகையான மங்களப் பொருட்களால், பேரபிஷேகம் நடந்தது. பெரியநாயகி மற்றும் பெருவுடையார், மாமன்னன் ராஜராஜசோழன், பட்டத்தரசி லோகமாதேவி, ராஜேந்திர சோழனின் உற்சவ மூர்த்திகள் வீதியுலா, கருத்தரங்கம், மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கும் நிகழ்ச்சிகளும் நடந்தது.
