நமது நிருபர்
”பாஜவுக்கு தொர்பில்லை; முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போடுங்க. உங்களுக்கு வந்தாலும் டெலிட் செய்யுங்கள். தியேட்டர் போய் தான் பார்ப்பேன்” என ஜனநாயகன் லீக் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், சமூக வலைதளத்தில் முழு திரைப்படமும் வெளியாகி உள்ளது. திட்டமிட்டு கசிய விடப்பட்டதா அல்லது யாரேனும் திருட்டுத்தனமாக வெளியிட்டனரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப்பட பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகன் லீக் விவகாரம் குறித்து கோவையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: இது ரொம்ப தப்பு. போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோதான் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். காரணம் லீக் ஆகி இருக்கு 3, 4 நிமிடம் படம். சிலர் முழு படம் என்று சொல்கின்றனர். நான் தேர்தலுக்கு பிறகு, ஜனநாயகன் படத்தை தியேட்டரில் போய் பார்ப்பேன். ஆதவ் அர்ஜூனா தேவையில்லாமல் பாஜவையும், மத்திய அமைச்சர் எல்.முருகன் பெயரையும் இழுக்கிறார்.
தியேட்டரில் பார்ப்பேன்
நான் விஜயின் ஜனநாயகன் படம் எப்பொழுது ரீலிஸ் ஆகிறதோ, ரசிகனாக தியேட்டரில் போய் பார்ப்பேன். அதையும் அரசியலையும் குழப்ப கூடாது. பாஜ கட்சியில் பொறுப்பில் இருக்க கூடிய மனிதன், தொண்டனாக இருக்கேன், சில இடங்களில் தலைவனாகவும் இருக்கேன்.
தயவு செய்து பொதுமக்கள் யாரும், இந்த மாதிரி வீடியோவில் படம் வந்தாலும் பார்க்காதீங்க, அது எத்தனையோ பேரின் உழைப்பு. எத்தனையோ பேரின் ரத்தம், வியர்வை, புரொடக்ஷன் கம்பெனியின் பணம். வந்தாலும் கூட skip செய்துவிட்டு போய்விடுங்கள்.
முட்டிக்கு முட்டி தட்டுங்கள்
யாரும் அந்த வீடியோவை அனுப்பினாலும் பார்க்காதீர்கள். தவெக தேவையில்லாமல் மத்திய அமைச்சர் எல்.முருகன் பெயரை இழுக்க கூடாது. அது அரசியல் அநாகரிகம். நீங்கள் யார் தப்பு செய்தார்களோ, போலீசில் புகார் கொடுத்து அவர்களை உள்ளே கொண்டு வந்து முட்டிக்கு முட்டி தட்டுங்கள். அரசியல் லாபத்திற்காக ஏன் தேவையில்லாமல் பாஜவை இழுக்கிறீர்கள். பாஜ எத்தனை இடத்தில் அரசியல் செய்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
