நாம் தமிழர் கார்த்திகா உள்ளிட்ட 9 பேருக்கு ஜாமீன்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதே  சமயம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.

தொடர்ந்து தாராபுரம் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா உட்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 9 பேருக்கு ஜாமீன் வேண்டும் என தாராபுரம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா உட்பட  ஒன்பது பேருக்கும் தாராபுரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று  காலை முதலே ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்ததால் மாலை 6 மணிக்கு மேலாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்களும் இதில் முன் வைக்கப்பட்டது. இதில் கார்த்திகா தரப்பு வழக்கறிஞர் அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அரசியல் காரணங்களுக்காக பல்வேறு பிரிவுகள் புகுத்தப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம்  ஜாமீன் வழங்க வேண்டும் என வாதத்தை முன்வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கார்த்திகா உட்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 9 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் 3 பேருக்கான ஜாமீன் மனு நாளை விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.