போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது: ஏ.பி.வி.பி., அமைப்பு கருத்து

சென்னை: “தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., வாயிலாக, போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் தான், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது,” என, பா.ஜ.,வின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி., அமைப்பின் தமிழக செயலர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அவரது பேட்டி:

தேர்தல் கமிஷன் கொண்டு வந்த, எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், வெளிப்படைத்தன்மையுடன், நியாயமாக நடந்தன. தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., வாயிலாக போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இல்லையெனில், ஆட்சிக்கு த.வெ.க., வந்திருக்க முடியாது. இதை உணர்ந்து, த.வெ.க., செயல்பட வேண்டும்.

தமிழக பல்கலைகளில் துணைவேந்தர்களை நியமிக்காததால், பட்டமளிப்பு விழா, ஆராய்ச்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக சிக்கல்கள் ஏற்படுகின்றன. அரசியல் மோதல்களை கைவிட்டு, வெளிப்படை தன்மையுடன் துணைவேந்தர்களை நியமிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு, அரசு கட்டண கட்டுப்பாடு ஏதுமின்றி, சட்டசபையில் நிறைவேற்றிய, தனியார் பல்கலை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். கோவை குண்டுவெடிப்பு வழக்கில், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை, பரோலில் விடுவித்தது கண்டனத்திற்குரியது. சட்டம் ஒழுங்கை காக்க, முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link