போத்தனுார்: கோவை, போத்தனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு, அக்., 5ம் தேதி, கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்த முகமது அஸ்லாம் என்பவர் ஒரு புகார் அளித்தார். அதில், ‘செப்., 28ல் மீன் விற்ற தொகை, 5 லட்சம் ரூபாயுடன், கேரளா செல்ல, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஆட்டோவில் வந்தேன்.
அப்போது பைக்குகளில், மூன்று பேர் என்னை மறித்தனர். தாங்கள் போலீஸ் என்று கூறி, ஹவாலா பணம் உள்ளதா என விசாரிக்க வேண்டும் என, பைக்கில் ஏற்றினர். க.க.சாவடி அருகே என்னை தள்ளி விட்டு, பணத்துடன் ஓடி விட்டனர்’ என, கூறியிருந்தார்.
போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கோவை மத்திய சிறை ஏட்டு பட்டுராஜா, 44, சிக்கினார். அவரிடம் விசாரித்ததில், பணத்தை பறிகொடுத்தவர் நகை வியாபாரி என்பதும், 15 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டதும் தெரியவந்தது.
பட்டுராஜாவுடன், கூட்டாளிகள் இப்ராஹிம், 38, இத்ரீஸ் அகமது, 36, ஆகியோர் சம்பந்தப்பட்டது தெரிந்தது. பட்டுராஜா, இத்ரீஸ் அகமது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஏட்டு பட்டுராஜா, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
