சென்னை: ‘காவலர்கள் சீருடையில், ஹிந்தி எழுத்துக்கள் இடம் பெற வேண்டும்’ என, கட்டாயப்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை, போலீஸ் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
கடந்த 1959ல், ஜம்மு – காஷ்மீர் லடாக் பகுதியில் ஊடுருவிய சீனப் படையினர் நடத்திய தாக்குதலில், நம் நாட்டின் சி.ஆர்.பி.எப்., எனும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், 10 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும், அக்., 21ம் தேதி, நாடு முழுதும், காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு, தமிழகத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டபோது, காவலரின் சீருடையில் ஹிந்தி எழுத்துக்கள் அடங்கிய கொடி அணிவிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: காவலர் களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில், டில்லியில், ஒரே கல்லால் ஆன, 30 அடி உயரத்தில், தேசிய காவலர் நினைவு சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் நடுவே, காவலரின் துப்பாக்கியும், அதன் மீது தொப்பியும் அணிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நினைவு சின்னம் தான், காவலர் வீர வணக்க நாள் கொடியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கொடியைத் தான், காவலர் வீர வணக்க நாளில் நாடு முழுதும் உள்ள போலீசார், அன்றைய தினத்தில் மட்டும், சீருடையில் அணிகின்றனர். தமிழகத்திலும் அது தான் நடந்தது. இதற்கு முன் நடந்த, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆட்சியின் போதும், காவலர் வீர வணக்க நாளில், இந்த கொடியைத்தான் காவலர்கள் அணிந்தனர். காவலர் சீருடையில் ஹிந்தி எழுத்து திணிக்கப்படுவதாக கூறும் குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
