பள்ளி ஆசிரியர் சாதியை சொல்லி அவமானப்படுத்தியதால் 16 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் அகிலன் (16). இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், நேற்று முன் தினம் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். இதற்கிடையில் அவரது தாயார் கவுசல்யா வெளியே சென்ற நிலையில், மதியம் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததையும் அவர் பலமுறை தட்டியும் திறக்காமல் இருந்ததையும் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று போது, அங்கு அகிலன் தூக்கில் தொங்கியபடி தற்கொலை செய்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவர் அகிலனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இருக்கிறீர்களா என்று கேட்கும் நோக்கத்தில் பள்ளி ஆசிரியர் விஜயகுமார், ‘யாரெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவீர்கள்’ எனக் சாதிய பாகுபாட்டில் கேட்டுள்ளார். அதற்கு அகிலன் உள்ளிட்ட மாணவர்கள் எழுந்து நின்றுள்ளனர். இதன் காரணமாக, சக மாணவர்கள் தொடர்ந்து சாதியின் பெயரை சொல்லி அகிலனை கிண்டல் செய்து வந்துள்ளனர்.
இது குறித்து அகிலன், தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எனக் கூறப்படுகிறது. இதனால் அகிலன் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த சூழலில், நேற்று முன் தினம் பள்ளிக்குச் சென்ற அகிலன் மீண்டும் வீட்டுக்கு வந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார், ஆசிரியர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
