”அந்த 74 படங்களை நீக்க வேண்டும்”; வற்புறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி மகன்

காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தியின் மகன் ரைஹான் வத்ரா ஒரு புகைப்பட கலைஞர் ஆவார். இவர் தான் பிடித்த புகைப்படங்களைப் பொதுவெளியில் காட்சிப்படுத்தக் கண்காட்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்காக, டெல்லியில் உள்ள ராஜஸ்தானின் அதிகாரப்பூர்வ ’பிகானேர்’ இல்லத்தில் உரிய அனுமதியுடன் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  

கண்காட்சிக்காக, பிகானேர் இல்லத்தின் இரண்டு அறைகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நிர்வாகத்தினர் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள 74 புகைப்படங்களை 2 மணி நேரத்தில் நீக்க வேண்டும் எனக் கூறியதாகவும், சில புகைப்படங்களை அவர்களே நீக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

குறிப்பாகக் கடந்த 6 மாதங்களாக டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களை அவர் படம் பிடித்ததாகவும், அந்த படங்களை சம்பந்தப்பட்ட நிர்வாகம் நீக்க வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதற்குப் பிரியங்கா காந்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இது குறித்து பிரியங்கா காந்தி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில்,  ”அதிகாரம் படைத்த ஒருவர், மற்றவர் வெளிப்படுத்தும் கருத்துகளைக் கண்டு அஞ்சும்போது, ​​அவர் தன்னை அறியாமலேயே, தற்காத்துக்கொள்ள முயலும் போது அந்த அதிகாரத்தையே இழந்துவிடுகிறார்.

உண்மையான விஷயங்களுக்காக உறுதியாக நில்லுங்கள். அப்போது அழகானவை அனைத்தும் உங்களைத் தேடி வரும். நான் உன்னை (ரைஹான்) நினைத்துப் பெருமைப்படுகிறேன், எப்போதும் பெருமைப்படுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

குறிப்பாக, இந்த கண்காட்சியில் சிஜேபி போராட்டங்கள் தொடர்பான புகைப்படங்களை நீக்க, ரைஹான் வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.