”இதுவும் கிடைக்காமல் போச்சே!”; அதிபர் ட்ரம்ப் மீண்டும் சோகம்

அமைதிக்கான நோபல் பரிசு, தனக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனினும், அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இதையடுத்து, அவர் நோபல் பரிசு வழங்கும் குழுவைக் கடுமையாகச் சாடியிருந்தார். அதே நேரத்தில், பரிசு பெற்றவர்களைக் கிண்டலடித்திருந்தார்.  

இந்நிலையில், தனக்கு நோபல் பரிசு தான் கிடைக்கவில்லை. ஆனால், ’புலிட்சர்’ விருதாவது கிடைத்திருக்கலாம் என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின், தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ”பல போர்களைத் தடுத்து நிறுத்திய தனக்கு, அமைதிக்கான நோபல் பரிசு தான் கிடைக்கவில்லை. எனினும், புலிட்சர் விருது கிடைத்திருக்க வேண்டும். அதுவும் கிடைக்கவில்லை” என்று கவலை தெரிவித்துள்ளார்.  

தொடர்ந்து பேசிய அவர், ரஷ்யா தொடர்பான விவகாரங்களில் தவறான செய்திகளை எழுதிய பத்திரிகையாளர்களுக்குப் புலிட்சர் விருது வழங்கப்பட்டதாகவும், தனது எழுத்துக்களுக்கு அந்த விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

புலிட்சர் விருது என்பது இதழியல், கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்த படைப்புகளை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டு தோறும் வழங்கப்படும் விருதாகும். கொலம்பியா பல்கலைக் கழகம் இந்த விருதுக்கான தேர்வை நிர்வகித்து வருகிறது. அதிபர் ட்ரம்ப், அரசியல் தொடர்பாக சுமார் 20 புத்தகங்களை எழுதியுள்ளார். இந்நிலையில், தன்னுடைய புத்தகங்கள் சிறப்பு மிக்கது எனவும், எனவே அந்த விருதை தனக்கு வழங்க வேண்டும் எனவும் ட்ரம்ப் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.