கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படங்களைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் ரிலீஸுக்கு தயாராகியுள்ள படம் ‘சீன்’. இப்படத்தை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியிருக்க சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து ‘ழகரம் ஸ்டூடியோஸ்’ மற்றும் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ பேனரில் தயாரித்துள்ளனர். நாயகியாக நஸ்ரியா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ‘பிரேமலு’ நாயகன் நஸ்லென் நடித்துள்ளார். அதோடு ஆனந்த ராஜ் ஜான் விஜய், யூடியூபர் ராஜ் பிரியன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை சுஷின் ஷ்யாம் கவனித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து கடந்த ஜூலையில் முடிந்தது. இதையடுத்து கடந்த மாதம் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. அதில் ஒரு கொலையை விசாரிக்கும் காவல் அதிகாரியாக டிஎஸ்பி இன்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா வந்திருந்தார். இந்த டீசர் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து சூர்யாவின் வித்தியாசமான லுக்கும் அவரது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தில் இருந்து நஸ்லென் கதாபாத்திர அறிமுகம் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் லாலிபாப் வைத்துக்கொண்டு பெரும்பாலான காட்சிகளில் நஸ்லென் தோன்றுகிறார். அவை அனைத்திலும் கொலை செய்துவிட்டு அந்த பிணங்களோடு அருகில் இருக்கிறார். இதனால் சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளது தெரிய வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில் வீடியோவின் நடுவில் ஈஸ்வரனைத் தேடும் சூர்யா, ‘நாம ஒரு முகமில்லாத, உணர்ச்சிகள் இல்லாத, மனித தன்மையற்ற கொடூரனைத் தேடுகிறோம்’ என்று குறிப்பிடுகிறார். இப்படத்திற்கு தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
