”த@டியடி திருவிழா”; நள்ளிரவில் நடந்த விசித்திர சம்பவம்

மலைக்கிராமத்தில் நடைபெற்ற தடியடி திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரா மாநிலம், கர்நூல் மாவட்டம், தேவரகட்டா பகுதியில் உள்ள மலைவாழ் கிராமங்களில் வாழும் மக்களிடையே, கடந்த பல ஆண்டுகளாக ’தடியடி திருவிழா’ எனும் விசித்திரமான திருவிழா நடைபெற்று வருகிறது.  

அதன்படி, மலைக்கிராமத்தில் உள்ள அம்மனுக்குச் சிறப்புப் பூஜை முடிந்ததும், அந்த அம்மன் சிலையைக் கைப்பற்றுதற்காக அப்பகுதியில் உள்ள மக்கள் சண்டையிட்டுக்கொள்வார்கள். அதாவது, அப்பகுதியில் வாழும் மக்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தடி உள்ளிட்ட பொருட்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வர். 

அதில், யார் வெற்றி பெறுகிறார்களோ? அவர்கள் அந்த அம்மன் சிலையை தங்கள் ஊருக்குக் கொண்டு செல்லலாம். இது பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஒரு திருவிழாவாகும். அந்த வகையில், இந்த ஆண்டும் வழக்கம் போல அப்பகுதியில் நள்ளிரவில் தடியடி திருவிழா நடைபெற்றது. இந்த மோதலின் போது நூற்றுக்கணக்கான மக்கள் தடி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில், 2 பேர் உயிர் இழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த தடியடி திருவிழாவில், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், அப்பகுதி மக்கள் தொடர்ந்து இந்த திருவிழாவை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விசித்திரமான திருவிழாவை நிறுத்த அதிகாரிகள் முயன்று வருகின்றனர். எனினும், ஊர் மக்கள் அதிகாரிகளின் கருத்தை ஏற்க முன் வரவில்லை எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், அங்கு 23 மலைக்கிராமங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.