சென்னை: ஜனநாயகன் திரைப்படம், தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே, இணையத்தில் வெளியானதற்கு, ரஜினி உள்ளிட்ட திரை பிரபலங்கள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதன் விபரம்:
நடிகர் ரஜினிகாந்த்: ஜனநாயகன் திரைப்படம், இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது, அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள், இதற்கு எதிராக குரல் எழுப்பி, அரசு இதை செய்தவர்களை கண்டுபிடித்து, கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம், இனியும் தொடரக்கூடாது.
நடிகர் சூர்யா: இது, மனதை உடைக்கும் அநீதி. தயவு செய்து, ஜனநாயகன் திரைப்படத்தை, இணையதளத்தில் பார்க்கவோ, பகிரவோ அல்லது இதைப்பற்றி பேசவோ வேண்டாம். அவர்களின் உழைப்பிற்கு மதிப்பு கொடுங்கள். என் நண்பர்களுக்கு ஆதரவாக நான் நிற்கிறேன். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இது, மன்னிக்க முடியாதது.
நடிகர் சிவகார்த்திகேயன்: ஒவ்வொரு திரைப்படமும், ஒவ்வொருவரின், ஆசை, ரத்தம், வியர்வையால் உருவாகிறது. தயவு செய்து, இணையதளத்தில் வெளியான பிரதியை தவிர்க்கவும். திரையரங்கில் வெளியாகும் வரை காத்திருந்து, அங்கு பார்த்து ரசியுங்கள். இந்த சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜய் தேவரகொண்டா: ஜனநாயகன் கசிவு எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. எனது ஆரம்பகால வாழ்க்கையில் இத்தகைய இழப்பை நானும் அனுபவித்து இருக்கிறேன். குற்றவாளிகளை உடனடியாக கண்டறியத் தவறினால் அது ஒட்டுமொத்த அமைப்பின் தோல்வி. இது கனவுகளை அழிக்கும் செயல்.
நடிகர் சரத்குமார்: ஜனநாயகன் பட விவகாரத்தை அரசியலாக்க கூடாது. ஜனநாயகன் படத்தை லீக் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும்.
நடிகை பூஜா ஹெக்டே; அன்பான ரசிகர்களே உங்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தனிப்பட்ட வாழ்க்கையை தியாகம் செய்து எங்கள் குழு பல மணி நேரம் உழைப்பை செலுத்தியுள்ளது. அப்படிப்பட்ட படம் கசிந்தது வருத்தமாக இருக்கிறது. விஜய் சாரின் கடைசி படத்தை பெரிய திரையில் கொண்டாடுவது தானே சரி. ஆகவே திரைக்கு வரும் வரை காத்திருப்போம்.
நடிகர் சிரஞ்சீவி: இது போன்ற செயல்கள் ஒட்டுமொத்த திரைத்துறையையும் பாதிக்கும். சினிமா என்பது பலரின் நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் கூட்டு கனவால் உருவானது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் படை ப்பாளிகளின் உழைப்பை மதித்து திருட்டுத்தனமாகப் படம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்: திரைத்திருட்டை ஆதரிக்காதீர்கள். திறமையையும் கடின உழைப்பையும் மதியுங்கள். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு ஏகப்பட்ட ரத்தமும் வியர்வையும் சிந்தப்படுகிறது. வேதனைக்குரியது.
நடிகை குஷ்பு: திருட்டுப்பிரதி என்பது பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு திட்டமிட்ட திருட்டு. அதில் ஈடுபடுபவர்கள், எந்தக் குற்றவாளிக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல. மற்ற குற்றங்களைப் போலவே அவர்களும் நடத்தப்பட வேண்டும்.
நடிகர் விஷால்: ஜனநாயகன் படத்தின் லீக் வீடியோக்களை பார்க்கும்போது மிகவும் மனம் உடைகிறது. இவ்வளவு உழைப்பு, அர்ப்பணிப்பு, முயற்சி எல்லாம் வீணாகும் போல தோன்றுகிறது.
இதேபோல, போஸ் வெங்கட், தயாரிப்பாளர் கேஆர், மோகன் ஜி, நடப்பு தயரிப்பாளர்கள் சங்கம், தெலுங்கு நடிகர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்தி, இயக்குனர் வெங்கட்பிரபு உட்பட ஏராளமான திரை பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
