பள்ளி மாணவர் தற்கொலை சம்பவம்; உறவினர்கள் போராட்டத்தால் கொதிப்பில் கோவை!

பள்ளி ஆசிரியர் சாதியை சொல்லி அவமானப்படுத்தியதால் 16 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பீளமேடு பகுதியைச் சேர்ந்த அகிலன் (16) என்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரை, ஆசிரியர் விஜயகுமார் என்பவர் ‘மாட்டுக்கறி சாப்பிடுவர்கள்’ எனக் குறிப்பிட்டு சாதியைச் சொல்லி அவமானப்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து சக மாணவர்கள், ஆசிரியர் விஜயகுமார் குறிப்பிட்ட அந்த வார்த்தையைப் பயன்படுத்தி சாதிய ரீதியாக அகிலனை தொடர்ந்து கிண்டல் செய்துள்ளனர்.

இது குறித்து அகிலன், தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எனக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அகிலன், நேற்று முன் தினம் (21-10-26) வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆசிரியர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர், உறவினர் ஆகியோர் கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது அகிலன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குற்றச்சாட்டுக்குள்ளான தலைமை ஆசிரியர் மற்றும் 2 மாணவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிகாரிகள், இந்த வழக்கில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அவர்களை கைது செய்யும் வரை மாணவர் அகிலனின் உடலை பெற மாட்டோம் என்ற உறுதியாக உள்ளனர். இதற்கிடையில், இந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.