பாலிவுட்டில் பிரம்மாண்ட பொருட் செலவில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. கிட்டத்தட்ட ஒரு பாகத்திற்கு ரூ.2000 கோடி என சொல்லப்படுகிறது. இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரிக்க நிதேஷ் திவாரி இயக்கி வருகிறார். இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் கே.ஜி.எஃப் யஷ் ராவணனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கிறார்கள். மேலும் சன்னி தியோல் அனுமான் கதாபாத்திரத்திலும் ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பனகை கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஆஸ்கர் விருதுகள் வென்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றனர். இப்படத்தின் முதல் பாகம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனால் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கின்றனர். மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து சென்னையில் விளம்பர நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
இதில் யஷ் கலந்து கொண்டு பேசுகையில், “என்னுடைய பள்ளி காலத்தில் இருந்து ராமாயணம் பார்க்கிறேன். ஆர்.எஸ்.மனோகரனின் ராமாயணம், அடுத்து, லங்கேஸ்வரன், இப்போது இந்த ராமாயணம். இதை ஒரு கற்றல் பயணமாகத்தான் பார்க்கிறேன். தொடர்ச்சியாக ஒழுக்கத்தை இந்தக் கதை கற்றுக்கொடுக்கிறது. ஒரு சிறந்த கதாபாத்திரம் தனது தாயிடம், தந்தையிடம், மனைவியிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என நமக்கு கற்றுத் தருகிறது. இது போல் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள இருக்கிறது.
நான் உங்களுடன் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2014-ல் எனக்கொரு இ-மெயில் வந்தது. அதில், ‘நீங்கள் அதிகாலையில் என் கனவில் வந்தீர்கள். இது நிச்சயம் நடக்கும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் இந்தியா முழுவதிலும், உலகம் முழுவதிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி, அந்த மாபெரும் காவியமான ராமாயணத்தை மக்களுக்கு வழங்கப் போகிறீர்கள்’ என இருந்தது. இதை சதீஷ் என்பவர் அனுப்பியிருந்தார். அவர் நேற்று இந்த கனவு நியாபகம் இருக்கிறதா எனக் கேட்டார். நான் இன்று செய்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை 2014-ல் எப்படி மக்களால் கணித்திருக்க முடியும் என நான் திகைத்துப்போனேன்” என்றார்.
