பள்ளி ஆசிரியர் சாதியை சொல்லி அவமானப்படுத்தியதால் 16 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பீளமேடு பகுதியைச் சேர்ந்த அகிலன் (16) என்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரை, ஆசிரியர் விஜயகுமார் என்பவர் ‘மாட்டுக்கறி சாப்பிடுவர்கள்’ எனக் குறிப்பிட்டு சாதியைச் சொல்லி அவமானப்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து சக மாணவர்கள், ஆசிரியர் விஜயகுமார் குறிப்பிட்ட அந்த வார்த்தையைப் பயன்படுத்தி சாதிய ரீதியாக அகிலனை தொடர்ந்து கிண்டல் செய்துள்ளனர்.
இது குறித்து அகிலன், தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எனக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அகிலன், நேற்று முன் தினம் (21-10-26) வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆசிரியர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர், உறவினர் ஆகியோர் கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது அகிலன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குற்றச்சாட்டுக்குள்ளான தலைமை ஆசிரியர் மற்றும் 2 மாணவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இந்த விவகாரத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “கோவையில் பள்ளியில் ஏற்பட்ட சாதிய பாகுபாட்டினால் 15 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்யாத இந்த டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். அந்தப் பள்ளியில் மாணவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாட்டிறைச்சி உண்பதாகக் கூறிய சம்பந்தப்பட்ட மாணவன், சாதி ரீதியாக வன்கொடுமையை எதிர்கொண்டு இருக்கிறார்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில், கழகம், முற்போக்கு அமைப்புகள், மாணவனின் பெற்றோர்கள், உறவினர்களின் போராட்டத்துக்குப் பிறகு வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, மாணவனின் மரணத்துக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும். பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
