“நடந்த தவறுகளை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) நடவடிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் (எஸ்.எஸ்.ஆர்) தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி நவம்பர் 12ஆம் தேதி முதல் டிசம்பர் 11ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களுக்கு வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பித்தவர்களின் தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து 2027 ஜனவரி 4ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று (23-10-26) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக, திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாதக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தவெக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஆம் ஆத்மி, நாதக ஆகிய 9 கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

கூட்டத்தைப் புறக்கணித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “எஸ்.ஐ.ஆரில் நடந்த தவறுகளால் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஏற்கெனவே எஸ்.ஐ.ஆரில் நடந்த தவறுகளை எப்படி சரி செய்ய வேண்டும் என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் தேவையற்றது. முதலில் நடந்த தவறை சரி செய்ய வேண்டும். இது போன்ற தவறுகள் மேலும் நடக்காமல் தேர்தல் மிகவும் நேர்மையாக நடக்க வேண்டும்.

நடந்த தவறுகளை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால் அதை சரி செய்ய வேண்டும் என்பதற்காக வெளிநடப்பு செய்துள்ளோம். எஸ்.ஐ.ஆரில் பெரும்பாலும் இளைஞர்கள், பெண்கள் நீக்கப்பட்டார்கள். அந்த வாக்குகள் எல்லாம் எங்களுக்கு வர வேண்டிய வாக்குகள். எஸ்.ஐ.ஆர் மட்டும் இல்லையென்றால் 160 சீட்டுக்கு மேல் தமிழக வெற்றிக் கழகம் எளிமையாக வெற்றி பெற்றிருக்கும்” என்று கூறினார்.