பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள படம் ‘சூர்யா’. இப்படத்தை கமல் முகுத் மற்றும் எம் எம் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. எம்.பத்மகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் ரவிகிஷன், பிரக்யா ஜெய்ஸ்வால், தினு ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஞ்சின் ராஜ், உத்தம் சிங் மற்றும் சுதாகர் தத் சர்மா ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
இப்படத்தின் டிரெய்லர் பட நாயகன் சன்னி தியோலின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 19ஆம் தேதி வெளியானது. அதில் இப்படம் மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக உண்மை சம்பவ அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘மருத்துவர்கள் வெறும் மருந்து சீட்டு எழுதுவதில்லை, கமிஷன் பெறுவதற்கான சீட்டை எழுதுகிறார்கள். நாமும் இதையெல்லாம் பொறுத்துக்கொள்கிறோம், ஆனால், இது இன்னும் எத்தனை காலத்திற்கு” என நாயகன் ஆக்ரோஷமாக பேசும் வசனங்கள் இடம் பெறுகின்றன. மேலும் இது சம்பந்தப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றுள்ளனர். இப்படம் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் டிரெய்லரில் இடம் பெற்ற வசனங்கள் மற்றும் காட்சிகளுக்கு இந்திய மருத்துவ சங்கம் (IMA) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தேசிய தலைவர் அனில்குமார் ஜே நாயக் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “சூர்யா படத்தில் மருத்துவத் தொழில் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் எங்களுக்கு கவலையைத் தருகிறது. டிரெய்லரில் வரும் காட்சிகள் மருத்துவத் துறையில் ஊழல் நடப்பதாக தவறான எண்ணத்தை விதைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. தனிநபர்கள் தவறு செய்தால் அதனை முறையாக விசாரணை செய்து அதற்கு தண்டனை கொடுக்க வேண்டும், அதற்காக ஒட்டுமொத்த மருத்துவர்களின் நற்பெயரைக் கெடுக்கக் கூடாது.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகள் வருகிறது. இது ஒரு வீரச் செயல்களாகவோ அல்லது நியாயப்படுத்தப்பட்ட செயல்களாகவோ காட்டப்படும்போது, உயிர்களைக் காப்பாற்ற அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுக்கு எதிரான வன்முறையை இயல்பாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் மருத்துவமனைகளில் ஏற்கனவே கடுமையான பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்கின்றனர். மருத்துவ நிபுணர்கள் மீதான தாக்குதல்களைப் பெருமைப்படுத்துவது போல் தோன்றும் காட்சிகள் மோதல் போக்கை ஊக்குவித்து, அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குபவர்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்துகிறது.
இந்திய மருத்துவ சங்கம் ஊழல், நெறிமுறையற்ற மருத்துவ நடைமுறைகள் அல்லது தொழில்முறை முறைகேடுகளை ஆதரிக்காது என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். எந்தவொரு தவறான செயலும் உரிய சட்ட மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளின் மூலம் கையாளப்பட வேண்டும். இருப்பினும், தனிநபர்களின் முறைகேடுகளை ஒரு முழுத் தொழிலுக்கும் பொதுமைப்படுத்தக் கூடாது. இதனால் உடனடியாக நீங்கள் தலையிட்டு படத்தை மறு ஆய்வு செய்து சரியான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள். எங்கள் நோக்கம், எந்தவொரு தவறு செய்தவரையும் பாதுகாப்பது அல்ல, மருத்துவத் தொழிலின் கண்ணியத்தைப் பாதுகாப்பதே ஆகும்” எனத் தெரிவித்துள்ளது.
