1,400 ஏக்கர் நேரடி நெல் விதைப்பு பாதிப்பு – நாகை மாவட்டத்தில் முறையான வடிகால் இல்லை என வேதனை – 1400 acer paddy field filled with rain water in nagapattinam district farmers agony

நாகை மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், திருக்குவளை வட்டத்துக்கு உட்பட்ட ஆய்மூர், பெருமழை, வடுவூர், தலைஞாயிறு, ஐந்தாம் சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,400 ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. முறையான வடிகால் வசதி இல்லாததால், எட்டு நாட்களான இளம் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சம்பா சாகுபடியும் மழைநீரில் வீணாவதாக வேதனை

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால், நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த மாதம் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் கடைமடைப் பகுதிகளுக்குப் போதிய அளவில் சென்றடையவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனால் ஏற்கனவே குறுவை சாகுபடியில் பாதிப்பைச் சந்தித்த விவசாயிகள், சம்பா சாகுபடியையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நம்பிக்கையில் நேரடி நெல் விதைப்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

திருக்குவளை வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில் சேதம்

திருக்குவளை வட்டத்துக்கு உட்பட்ட ஆய்மூர், பெருமழை, வடுவூர், தலைஞாயிறு, ஐந்தாம் சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,400 ஏக்கர் பரப்பளவில் விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. விதைப்பு செய்து எட்டு நாட்களே ஆன நிலையில், இளம் நெற்பயிர்கள் தொடர்ந்து மழைநீரில் மூழ்கிக் கிடப்பதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்குப் போதிய வடிகால் வசதிகள் இல்லாததே இந்தப் பாதிப்புக்கு முக்கியக் காரணம் என்றும், வடிகால் வசதிகளை முறையாகப் பராமரிக்காத பொதுப்பணித்துறையின் கவனக்குறைவே தங்களது பயிர்கள் பாதிக்கப்படுவதற்குக் காரணம் என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறுவை சாகுபடி கைவிட்ட நிலையில் கேள்விக்குறியான சம்பா சாகுபடி

நேரடி நெல் விதைப்புக்காக நிலத்தை உழவு செய்வது, விதை நெல் வாங்குவது உள்ளிட்ட ஆரம்பகட்டப் பணிகளுக்கே ஏக்கருக்கு சுமார் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக கூறும் விவசாயிகள், குறுவை சாகுபடி ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சம்பா சாகுபடியும் தொடக்கத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு விவசாயத்தை எவ்வாறு தொடர்வது எனத் தெரியாமல் தவித்து வருவதாகக் கண்ணீர் மல்கக் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்ட வயல்களில் வேளாண் துறையினர் ஆய்வு செய்யவில்லை

மழைநீர் தேங்கியுள்ள வயல்களை வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தேங்கியுள்ள மழைநீரைவெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்குவதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நிரந்தர வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

குறுவை சாகுபடி கைகொடுக்காத நிலையில், சம்பா சாகுபடியையும் மழைநீர் பாதித்துள்ளதால், நாகை மாவட்ட டெல்டா விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

Source link