ரவி மோகன் தொடர்ந்த வழக்கில் தடை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

ரவி மோகன் தயாரித்து நடித்து வரும் புதுப்படம் ‘ப்ரோ கிளப்’. கார்த்திக் யோகி இயக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி பிரியா, மாளவிகா மனோஜ், அர்ஜூன் அசோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசைப் பணிகளை ஹர்ஷவர்தன் ரமேஷ் குமார் மேற்கொள்கிறார். இப்படம் முன்னதாக ‘ப்ரோ கோட்’ என்ற தலைப்பில் உருவானது. ஆனால் அத்தலைப்பிற்கு டெல்லியை சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.

பின்பு ரவி மோகனும் தன் பங்கீற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இரு வழக்கும் நடைபெற்று வந்த நிலையில் இரு தரப்பிற்கும் சமரச பேச்சு வார்த்தையும் நடந்தது. அதில் உடன் பட்டதால் வழக்கினை வாபஸ் பெற்று இரு தரப்பும் சமாதானமாக சென்றது. அதன்படி படத்திற்கு ப்ரோ கிளப் என தலைப்பு மாற்றப்பட்டது. இந்த நிலையில், ரவிமோகன் சென்னை உயர்நீதி மன்றத்தில் புது மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘ப்ரோ கிளப் படத்தின் உரிமைகள் தங்களிடம் இருப்பதாக மிராக்கிள் மூவிஸ் நிறுவனம் பொய்யான தகவலை பரப்பி வருகிறது. இது படத்தின் பதிப்புரிமையை மீறும் செயலாகும். எனவே, இதுபோன்ற தகவல்களை பரப்ப தடை விதிக்க வேண்டும். ரூ.50 லட்சம் இழப்பீடும் வழங்கவு உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரவி மோகன் தரப்பில் படத்தின் பெயரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்த கடிதம் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து படத்தின் பதிப்புரிமையை மிராக்கிள் மூவிஸ் நிறுவனம் மீறியுள்ளதாகவும் இந்த படம் தொடர்பான தகவல்களை அந்நிறுவனம் பரப்ப இடைக்காலத் தடை விதிப்பதாகவும் உத்தரவிட்டார். மேலும் ரவி மோகன் மனுவுக்கு வருகிற நவம்பர் 3ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.