“வெற்றி பெற்றால் ஈவிஎம் வாழ்க, தோற்றால் ஈவிஎம் ஒழிக-வா?” – ஜெயக்குமார் ஆவேசம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) நடவடிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் (எஸ்.எஸ்.ஆர்) தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி நவம்பர் 12ஆம் தேதி முதல் டிசம்பர் 11ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களுக்கு வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பித்தவர்களின் தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து 2027 ஜனவரி 4ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று (23-10-26) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக, திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாதக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தவெக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஆம் ஆத்மி, நாதக ஆகிய 9 கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். ஆனால், அதிமுக, பா.ஜ.க, தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்றன.

இந்த நிலையில், அதிமுக சார்பாக இந்த கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எஸ்.ஐ.ஆர் போய் இப்போது எஸ்.எஸ்.ஆர் வந்திருக்கிறது. எஸ்.ஐ.ஆரில் இறந்தோர் தவிர்த்து, இடம் மாறியவர்கள் என்ற அடிப்படையில் 55 லட்சம் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு முறை பதிவு செய்தவர்கள் 4 லட்சம் பேர், நிரந்தரமாக வேறு இடத்துக்கு மாறியவர்கள் 13 லட்சம் பேர், என டபுள் எண்ட்ரி, இறந்தவர்கள், இடமாற்றம் என்று தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆரில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். எஸ்.ஐ.ஆர் மீது ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் இருக்கிற சூழலில், எஸ்.எஸ்.ஆர் நடைமுறையில் வாக்காளர் பட்டியலை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் கூறினோம்.

தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ள சூழலில், அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் எண்ணமாக இருக்க வேண்டும். இந்த கூட்டத்தை உள்ளிருப்பு செய்வதும், வெளிநடப்பு செய்வதும் ஜனநாயகம். இது அவர்களுடைய உரிமை. அவர்களைப் பொறுத்தவரை வெற்றி பெற்றால் ஈவிஎம் வாழ்க… தோல்வி அடைந்தால் ஈவிஎம் மிஷன் ஒழிக.. இது தான் கோட்பாடு.. நான் ஞானேஷ் குமாருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.