தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் அப்பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மேரி ரெஜிலா என்பவருடன் திருமணமாகி, இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த சூழலில் இன்று (23.10.2026) அதிகாலை பொழுது முத்துகிருஷ்ணனின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் அத்துமீறு நுழைந்துள்ளனர். அதன் பிறகு அந்த கும்பல், முத்துகிருஷ்ணன், மேரி ரெஜிலா, அவர்களது மகன் ஆகிய 3 பேரையும் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், முத்துகிருஷ்ணனின் இரு மகள்களை மர்ம கும்பல் கடத்திச் சென்றனர்.
இதற்கிடையில், தாக்குதலில் பலத்த காயமடைந்த மேரி ரெஜிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் முத்துகிருஷ்ணன் மற்றும் மகர் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர், அங்கு விரைந்து மேரி ரெஜிலாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தாயைக் கொன்று இரு மகள்களையும் கடத்திச் சென்ற நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில், பரோட்டா மாஸ்டர் ஞானபிரகாஷ் என்பவரைக் கைது செய்துள்ளனர். ஞானபிரகாஷ், தாக்குதலுக்கு உள்ள தம்பதியின் 15வயது மகளைக் காதலித்து வந்ததாகவும், இந்த காதலுக்கு மேரி ரெஜிலா எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை வீடு புகுந்து கொலை செய்துவிட்டு அவரது இரு மகள்களையும் அவர் கடத்திச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஞானபிரகாஷ் கடத்திச் சென்ற இருவரையும் போலீசார் மீட்டுத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து மேரி விஜீலா என்கிறப் பெண் வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்டு, அவரின் இரண்டு பெண் குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர். அவரின் கணவரும் மகனும் படுகாயமடைந்துள்ளனர். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வீட்டிலும் பாதுகாப்பில்லை, பொது வெளியிலும் பாதுகாப்பில்லை எனும் அளவிற்கு ஓர் அசாதாரணச் சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது பொறுப்பற்ற தவெக அரசு.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அன்றாடச் செய்தியாகிக் கொண்டிருக்கும் போது, அவற்றைத் தடுக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறது ரீல்ஸ் அரசின் சினிமாத்தனமான அதிரடிப்படை?. தங்களுக்கு வாக்களித்த பெண்களின் பாதுகாப்புக்கு வேட்டு வைப்பதுதான் தவெக அரசு அவர்களுக்குத் தரும் பரிசா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
