“இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் தேர்தல் ஆணையம் பதில் சொல்லவில்லை” – பரந்தாமன் பேட்டி!

வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தச் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று (23.10.2026) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக, திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாதக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இருப்பினும்  கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் நடந்த முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தவெக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். 

அதனைத் தொடர்ந்து திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மொத்தமாக தவெக கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகள், திமுக மற்றும் அதன் கூட்டணிகள், நாதக என 9 கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர். இறுதியாக அதிமுக, பா.ஜ.க, தேசிய மக்கள் கட்சி மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்றன. இதனையடுத்து, தி.மு.க.வின் சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கூட்டத்தின் தொடக்கத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்வைக்கப்பட வேண்டிய கருத்துகளை, மக்களின் தேவைகளை முன்னிறுத்தி அங்கே தெரிவித்துவிட்டு நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம். 

கூட்டத்தில் நாங்கள் முழுமையாகப் பங்கேற்கவில்லை. கூட்டத்தின் தொடக்கத்திலேயே அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாகத் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்துவிட்டு வெளியேற வேண்டும். அந்த வகையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் தனது கருத்துகளை முன்வைத்துவிட்டு வெளியேறியிருக்கிறது. இதில் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு குளறுபடிகளை எப்படிச் சரிசெய்யப் போகிறீர்கள்? எப்போது சரிசெய்யப் போகிறீர்கள்? என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதான கேள்வி. கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்குப் பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 74 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். நீக்கப்பட்ட அந்த வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று நாங்கள் கேட்டிருக்கிறோம்.

நீக்கப்பட்டவர்கள் எல்லாம் நாடு கடத்தப்பட்டுவிட்டார்களா? அவர்கள் இந்தியாவில் இல்லையா? தமிழ்நாட்டில் வசிக்கவில்லையா? அப்படியென்றால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தேர்தல் ஆணையம் பதில் சொல்லவில்லை. தற்போது எஸ்.ஐ.ஆர். என்ற நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இப்போது எஸ்.எஸ்.ஆர். எனப்படும் ஸ்பெஷல் சம்மரி ரிவிஷன் (Special Summary Revision) நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. இது ஆண்டுதோறும் ஜனவரி 1ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியாகும். ஆனால், இதற்கு ஸ்பெஷல் சம்மரி ரிவிஷன் என்று பெயரிட்டு தற்போது நடத்துகிறார்கள்.

நீங்கள் எஸ்.ஐ.ஆர். நடத்தினாலும், எஸ்.எஸ்.ஆர். நடத்தினாலும், அது மக்களுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் வாக்காளர்களுக்கு எளிதானதாக இருக்க வேண்டும். வாக்காளர்கள் தங்களுடைய பெயர்களைப் பட்டியலில் பதிவு செய்துகொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். ஆனால், அத்தகைய வசதிகள் எதுவும் இல்லை. ஒருபுறம், தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விளம்பரப்படுத்துகிறது. அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் இதையெல்லாம் நீங்கள் பார்க்கலாம். ஆனால், வாக்காளர் பட்டியலில் ஒருவருடைய பெயரைச் சேர்ப்பதற்கே பல்வேறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தும்போது, ஜனநாயகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்துவது முரண்பாடாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.