– நமது நிருபர் –
மஹாராஷ்டிராவில் உணவு பாதுகாப்பு ஆணையராக சமீபத்தில் துக்காராம், பொறுப்பு ஏற்றார். அந்நாள் வரை அமைதியாக செயல்பட்டு வந்த அத்துறை வேகம் காட்டியது. உணவு பாதுகாப்பில் சமரசம் செய்யாத துக்காராம் சிறிய உணவகம், பெரிய உணவகம் என பாரபட்சம் பார்க்காமல் சோதனை நடத்தினார். குறைபாடு உள்ள உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. பல உணவகங்களுக்கு அபராதம் விதித்தார். இதனால், உணவின் தூய்மை குறித்து நாடு முழுதும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது.
அதேநேரத்தில் 2005ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்த துக்காராம், 21 ஆண்டுகளில் 25 முறை இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், அவரது குடும்பமும் அடிக்கடி இடம்பெயர்ந்தது. அவரது மகன் 5ம் வகுப்பு செல்வதற்குள் 6 பள்ளிகளுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில், சர்வதேச மராத்தா வர்த்தக கணகாட்சியில் துக்காராம் பேசியதாவது: எனது குழந்தைகள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் ஆக வேண்டும் என அறிவுறுத்த மாட்டேன். பொது சேவையை நிராகரிக்க வேண்டும் எனக்கூறவில்லை. மாறாக, சமூகத்திற்கு பெரியளவில் பங்காற்ற வேண்டும்.
பாரம்பரிய கட்டமைப்புகளை தாண்டி, புதிய வாய்ப்புகளை தேடவும், உருவாக்கும் திறமை, ஆற்றல், அறிவு ஆகியன இளம் தலைமுறையினரிடம் உண்டு. தொழில்முனைவோர் மற்றும் பொது வாழ்க்கையில் தலைமை பண்பு ஆகியன புதிய கொள்கைகளை உருவாக்கவும், பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தவும் பெரிய சுதந்திரத்தை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
