“துளசிமதி முருகேசனுக்கு ரூ. 1.25 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்” – முதல்வர் விஜய்!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரே நாளில் தங்கம் உள்பட 3 பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ஊக்கத்  தொகை  வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “ஜப்பானில் நடைபெற்றுவரும் 5வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் இரட்டையர் SL3-SU5 பிரிவில் தங்கப் பதக்கமும், கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்ற இந்திய அணிகளுக்கும், அவ்வணிகளில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்!

வீராங்கனை துளசிமதி முருகேசனின் சாதனைகளைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1.25 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர், இதுவரை மூன்று பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரது தொடர் வெற்றி, சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. அவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.