தனியார்களின் பிரசாதக் கடைகளுக்குச் செக் வைக்கும் வகையில், கோவில் நிர்வாகமே நேரடியாகத் தரமான பிரசாதங்களைத் தயாரித்து பக்தர்களுக்கு வழங்கும் புதிய திட்டத்தை சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் இன்று முறைப்படி தொடங்கி வைத்தார்.
கோவில்களில் பொது ஏலம் விடப்பட்டு, தனியாரால் வெளியே தயாரிக்கப்படும் பிரசாதங்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், முதுநிலை திருக்கோவில்களில் கோவில் வளாகத்திலேயே நேரடியாகப் பிரசாதம் தயாரிக்கப்படும் எனச் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஏற்கனவே சுவாமிமலை, தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் உட்பட 37 முதுநிலை கோவில்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது பார்த்தசாரதி கோவிலிலும் இத்திட்டம் நேரடி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அன்னதானத் திட்ட விரிவாக்க அறிவிப்பின் கீழ் மேலும் 10 திருக்கோவில்களுக்குத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, ஆண்டுக்குக் கூடுதலாக 2,25,475 பக்தர்கள் பயனடையும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோவிலுக்கு மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் வசதிக்காக ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் 4 மின்கலச் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன.
சட்டைமுனி, திருமூலர், இடைக்காடர் ஆகிய சித்தர்களுக்கும், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வாருக்கும் சிறப்பு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. திருவானைக்காவல் (சட்டைமுனி), திருச்சி மலைக்கோட்டை (திருமூலர்), இடைக்காட்டூர் (இடைக்காடர்) மற்றும் மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில் (பூதத்தாழ்வார்) இத்திருவிழாக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கோவில் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முக்கிய அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன:
* மகப்பேறு விடுப்பு உயர்வு: பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
* ஈட்டிய விடுப்பு பணப்பலன்: ஓய்வு பெறும்போது ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பதற்கான உச்சவரம்பு 210 நாட்களிலிருந்து 240 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
* திருமணக் கடன் உயர்வு: கோவில் பணியாளர்களுக்கான திருமணக் கடன் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு வருவது பக்தர்களிடையேயும் கோவில் பணியாளர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிகழ்வில் அறநிலையத்துறை ஆணையர் டாக்டர் டி.ஜி. வினய், இ.ஆ.ப. உள்ளிட்ட துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
