இயக்குநர் மாரி செல்வராஜ் பைசன் காளமாடன் படத்தை தொடர்ந்து ‘மஞ்சணத்தி’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ‘நவ்வி ஸ்டூடியோஸ்’ மற்றும் ஃபார்சியூன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இதில் நவ்வி ஸ்டூடியோஸ் மாரி செல்வராஜின் மனைவி திவ்யா நிர்வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இவருடன் மாரி செல்வராஜ் முதல் முறையாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியது. இப்படத்தில் நடிகைகள் பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் பரியேறும் பெருமாள் கதிர், 29 பட நாயகன் விது, நடன அமைப்பாளர் சாண்டி, பூர்ணிமா ரவி ஆகியோரும் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு கடந்த மாதம் தேனியில் பூஜையுடன் தொடங்கியது. இளையராஜா கலந்து கொண்டு கிளாப் அடித்து துவங்கி வைத்தார். இந்த நிலையில் அதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக நடிகை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “ஒரு மாறுபட்ட உலகம். ஒரு மாறுபட்ட பள்ளி. ஒரு மாறுபட்ட நான். மேலும், விஷயங்களைச் சற்று வித்தியாசமாகப் பார்க்க எனக்கு உதவிய ஒரு கதைசொல்லி. மஞ்சணத்தி படத்தின் படப்பிடிப்பு நிறைவு” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாரி செல்வரஜுடன் நடந்து போகும் படத்தையும் பகிர்ந்துள்ளார்.
