வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தச் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று (23.10.2026) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, தி.மு.க.வின் சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் ஞானேஷ் குமார் தொடர்பாகவும் நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறோம்.
கடந்த 17ஆம் தேதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி வெளியிட்டிருக்கிறோம். அவற்றில் முக்கியமான தீர்மானம், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதாகும். குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு அளிப்பது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில்தான் இன்றைக்கும் எங்களுடைய நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறோம்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவியில் வைத்துக்கொண்டு எந்தவொரு நடவடிக்கையை மேற்கொண்டாலும், எந்தவொரு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை நடத்தினாலும், அதில் நம்பகத்தன்மை இருக்காது. உண்மையான வெளிப்படைத்தன்மையும் இருக்காது. எனவே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதான கோரிக்கை என்னவென்றால், தற்போதைய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரை வைத்துக்கொண்டு நீங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையும் பயனற்றதாகவே இருக்கும். அது வீணான முயற்சி; கண்துடைப்பு நடவடிக்கை. ஜனநாயகத்தை ஏமாற்றும் செயலாகும்.
அதனால்தான் இந்தியாவில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தற்போதைய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் மீது நம்பிக்கையை இழந்திருக்கின்றன. அவருக்கு எதிராகப் பல்வேறு கருத்துகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருக்கிறோம். எனவே, ஒன்றிய அரசு இதற்குச் செவிசாய்க்க வேண்டும். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும். இல்லையெனில், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறாது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்துத்தான் நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.
