தப்பிச் சென்ற திருட்டுக் கும்பல் : போலீசார் தீவிர விசாரணை!

ஈரோடு மாவட்டம் சிவகிரி விளக்கேத்தி விஜய நகரத்தை சேர்ந்தவர் பெரியசாமி . இவர் மனைவி சம்பூர்ணம் (63).கடந்த 18-ல் இவரது வீடு பகலில் பூட்டி இருந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் வீட்டில் திருட முயற்சி செய்துள்ளனர். அப்போது அவர்கள் மக்கள் நடமாட்டத்தைக் கண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து வீட்டு அருகே இருந்தவர்கள் கூறிய அடையாளம், கேமரா காட்சிகள் அடிப்படையாகக் கொண்டு போலீசார் தேடி வந்தனர். இதில் மர்ம  ஆசாமிகள் காரில் இருந்து திருட்டில் ஈடுபடுவதை போலீசார் உறுதி செய்தனர்.

கார் மர்ம கும்ப கும்பல் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்ததால் ஈரோடு தாலுகா ரோந்து போலீசார் சோலாரில் சம்பவத்தன்று இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகத் திருட்டு கும்பல் காரில் வந்துள்ளனர். அவர்கள் போலீசாரை கண்டதும் காரை திருப்பிக் கொண்டு வேகமாகச் சென்றனர். உடனடியாக போலீசாரும் திருட்டு கும்பல் காரை விரட்டி சென்றனர். கொடுமுடி காரணம்பாளையம் ரயில்வே கேட்டில் கார் மோதி நின்ற நிலையில் அதிலிருந்து திருட்டு கும்பல் தப்பி சென்றனர். தொடர்ந்து துரத்திய போலீசார் வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டதால் திருட்டு கும்பல் பயணித்த சுசுகி எஸ் கிராஸ் காரை மட்டுமே கைப்பற்ற முடிந்தது . 

சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் போலீசார் திருட்டு கும்பல் காரை துரத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, திருட்டு கும்பல் வந்த காரில் இருந்தது போலி நம்பர் பிளேட் ஆகும். இதனால் காரின் இன்ஜின் எண், சேசிஸ் எண்ணை கொண்டுதான் ஒரிஜினல் நம்பரை கண்டுபிடிக்க முடியும். காரில் ஸ்க்ரு டிரைவர் , உளி கையுறை உள்ளிட்ட கதவைத் திறக்க தேவையான பொருட்கள் இருந்தன. சோப்பு பல் துலக்கும் டிரஸ் டவல் பவுடரும் இருந்ததால் காரை வீடுபோல் பயன்படுத்தித் தொடர் திருட்டில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது என்றனர். இந்நிலையில் போலீசாரிடம் சிக்கிய காரை வைத்து திருட்டு கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.