சென்னை : வெளிநாடு செல்ல முயன்ற, ‘கிரானைட்’ வீரமணியின் மகளை, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சிறுமியரை பாலியல் வன்முறை செய்தது தொடர்பாக, ‘போக்சோ’ வழக்கில், ‘கிரானைட்’ வீரமணி, 85 மற்றும் அவரது குற்றத்திற்கு உடந்தையாக இருந்த தோழி சாந்தி, 61 உட்பட, எட்டு பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, போலீஸ் அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 23 கிலோ தங்க கட்டிகளை, வீரமணி கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதற்கு இடைத்தரகராக, ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் மகனான பிரகாஷ் கண்ணையா என்பவர் செயல்பட்டுள்ளார்.
இதையடுத்து, பிரகாசை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர், பிரிட்டன் தலைநகர் லண்டனில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. பிரகாஷ் நெருங்கிய நட்பு வட்டத்தில், வீரமணியின் மகள் அர்ச்சனா இருந்து உள்ளார். இவர் பிரகாஷுடன் சேர்ந்து, தந்தை மீதான குற்றத்தை மறைக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ விமானத்தில், அர்ச்சனா வெளிநாடு செல்ல முயன்றார். அவரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று தடுத்து நிறுத்தினர். இதனால், அவரது வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டது.
வீரமணியை 2 நாள் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி:
கிரானைட் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன், முன்னாள் உதவியாளர் கணேசன் ஆகியோரை, மூன்று நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிறப்பு புலனாய்வு குழு சார்பில், சென்னை, ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு வீரமணி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கணேசனை மட்டும் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிபதி பத்மா அனுமதி வழங்கியிருந்தார். வீரமணி உட்பட மூவரிடம் விசாரணை நடத்துவது குறித்து, நேற்று தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி, நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை, இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார்.
