திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார், 4 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில், ஏழு பேருக்கு ‘ஜிபே’ வாயிலாக, 13 லட்சம் ரூபாய் பெறப்பட்டது அம்பலமானது.
திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல அலுவலகம், 15 வேலம்பாளையத்தில் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று மாலை, 4:00 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான போலீசார், மண்டல அலுவலக கதவுகளை பூட்டிவிட்டு அலுவலகம் முழுதும் சோதனையிட்டனர். நிரந்தர, தற்காலிக ஊழியர்களின் ஜிபே கணக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
ஆய்வு இரவு, 8:00 மணி வரை நடந்தது. இதில், ஊழியர்கள் உட்பட, 7 பேரின் வங்கி கணக்கில் ஜிபே வாயிலாக நேற்று ஒருநாள் மட்டும் மொத்தம், 13 லட்சம் ரூபாய் பெறப்பட்டிருந்தது தெரியவந்தது.
குறிப்பிட்ட தொகை யாரிடமிருந்து, எதற்காக பெறப்பட்டது என்பது குறித்து விளக்கம் கேட்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
