பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே, ஓடும் காரில் இருந்து மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோட முயன்ற நபரை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.
வெறிச்செயல்:
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகிலுள்ள லா வெரியர் பகுதியில், காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சாலையோரம் சென்றுகொண்டிருந்த பொதுமக்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினான். இந்த கொடூர தாக்குதலில் குண்டு பாய்ந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர்.
மடக்கிப் பிடித்த போலீஸ்:
துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு காரில் தப்பிய அந்த நபரை, போலீசார் விரட்டி சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பிரதமர் கண்டனம்:
இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு, குற்றவாளிக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என உறுதி அளித்துள்ளார்.
ஏற்கனவே பிரான்சில் விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டங்களும் பதற்றமும் நிலவி வரும் வேளையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
