கோல்கட்டா: '' மேற்கு வங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகி விட்டனர்,'' என பிரதமர் மோடி

கோல்கட்டா: ” மேற்கு வங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகி விட்டனர்,” என பிரதமர் மோடி பேசினார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு புர்பா பர்தமன் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி உள்ளனர். இவர்கள் மேற்கு வங்கத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போகின்றனர். இங்கு கூடிய கூட்டம், மே 4 ல் வரப்போகும் முடிவுகளுக்கு ஒரு டிரெய்லர் தான். இந்தத் தேர்தலில் உங்களின் உற்சாகம், ஆற்றல், ஆர்வம், தீர்மானத்தை எடுத்து காட்டுகிறது. மாற்றத்திற்கு மேற்கு வங்கம் தயாராக உள்ளது.

தேர்தல் முடிவடைந்த அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் அதிகளவு ஓட்டுகள் பதிவாகி உள்ளன. பெண்கள் ஏராளமானோர் ஓட்டுப் போட்டுள்ளனர். எந்த அசாம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக தேர்தல் நடந்து முடித்த தேர்தல் கமிஷனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்னர் பீஹார், மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவிலும் இதனை பார்த்தோம். எங்கெல்லாம் அதிகளவு ஓட்டுகள் பதிவாகி, பெண்கள் அதிகம் பேர் ஓட்டுப் போட்டுள்ளனரோ அங்கெல்லாம் பாஜ கூட்டணி மெஜாரிட்டி உடன் வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தை வளர்ச்சியில் புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல பாஜ உறுதிபூண்டுள்ளது.

மோடியின் வாக்குறுதி . திரிணமுல் காங்கிரசின் இரக்கமற்ற ஆட்சியால் ஏற்பட்ட அச்சத்தை நம்பிக்கையாக மாற்றுவதே மோடியின் உத்தரவாதம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Source link