முதல்வர் விஜய்யை தொடர்ந்து தமிழ் சினிமா நடிகர்கள் அரசியலில் களமிறங்க தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் தனுஷ் அரசியலில் களம் இறங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தனுஷின் செயல்பாடுகளும் அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும் அமைந்து வருகிறது. அவரது அரசியல் வருகை குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து வருகின்றனர்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நேற்று அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஜனநாயக கட்டமைப்பில் அனைவருக்கும் அரசியலில் ஈடுபடும் உரிமையும் சுதந்திரமும் உள்ளது. இதில் நாம் எந்த வரையறையும் நாமே வரையறுத்து சொல்ல முடியாது. அவருக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கிறது என்பது ஊடகங்களில் வருகிற யூகங்களாகத் தான் இருக்கின்றன. இன்னும் அவர் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே அதன் மீது கருத்துச் சொல்வதற்கு இப்போதைக்கு ஏதும் இல்லை.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டுக்கு அரசியலுக்கு புதியது அல்ல. நடிகர் விஜய் தான் முதன்முதலாக தொடங்கி வைத்தார் என்று சொல்ல முடியாது. திரைப்பட கலைஞர்களுக்கும் ஆளுமைகளுக்கும் அரசியல் களத்திற்கும் நெடுங்கால தொடர்பு இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கலையுலக தொடர்பு என்பது அரசியலில் தீவிரமாக இருக்கிறது. எனவே இதை நாம் புதிய ஒன்றாக பார்க்க முடியாது” என்று கூறினார்.
