வாட் வரி குறைப்பு: தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு மழை; விமானத் துறையில் வரப்போகும் பெரிய மாற்றம்

தமிழகத்தில் விமான எரிபொருள் மீதான வாட் வரி 29 சதவீதமாக இருக்கிறது. இது, மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது அதிகம் ஆகும். இதனால் தமிழக நகரங்களுக்கு புதிய விமான சேவைகளை தொடங்க நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல், விமான நிறுவனங்கள் தங்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டி உள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

கொடைக்கானல், குன்னூர், மாஞ்சோலை… அதீத மழையால் நிலச் சரிவு அபாயம்; திங்கட் கிழமை காலைக்குப் பிறகு பழைய சென்னையை பார்ப்பீங்க

இதன் காரணமாக, விமான எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்குமாறு தமிழக அரசுக்கு விமான நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இதனை பரிசீலித்து வந்த தமிழக அரசு, தற்போது விமான எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் வணிவரித்துறை பிறப்பித்துள்ள அரசாரணையில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் விமானங்களுக்கு எரிபொருள் மீதான வாட் வரி 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக குறைக்கப்படுகிறது. சென்னையைத் தவிா்த்து தமிழகத்தின் பிற விமான நிலையங்களில் திட்டமிடப்பட்ட விமான சேவை நிறுவனங்களின் விமானங்களுக்கு விற்பனை செய்யப்படும் எரிபொருள் மீதான வரி 29 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வரிக் குறைப்பு வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 2027-ஆம்  ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்சமாகப் புறப்படும் எடையை 40,000 கிலோவுக்கு குறைவாகக் கொண்ட திட்டமிடப்பட்ட விமானங்களுக்கான எரிபொருள் மீதான வரி, பிற விமான நிலையங்களில் 5 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

வரிச் சலுகையைப் பெறுவதற்காக, சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் உரிய அறிவிப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து மாதாந்திர வரிக் கணக்குடன் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோவை, சேலம் போன்ற தொழில்துறை நகரங்களில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்க பலரும் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் இந்த வரி குறைப்பை வரவேற்று இண்டிகோ நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விமான எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்க தமிழ்நாடு அரசு எடுத்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். மேலும், இந்த முற்போக்கான முயற்சிக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்களை முதலமைச்சர் விஜய்க்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுபோன்ற நடவடிக்கைகள் வான்வழி இணைப்பை வலுப்படுத்துவதோடு, மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக அமைந்து, இந்தியாவில் ஒரு வலிமையான விமானப் போக்குவரத்து அமைப்பை உருவாக்கப் பங்களிக்கின்றன. இதுபோன்ற முற்போக்கான முயற்சிகள் வான்வழிப் பயணத்தை மக்களிடையே மேலும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றும் என நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளது.

Source link