கனமழையால் அடுத்தடுத்த இடங்களில் மண் சரிவு; பயணிகளோடு அரசு பேருந்து சிக்கியதால் பரபரப்பு!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று (23-10-26) தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே கனமழை காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (24-10-26) ஆரஞ்ச் நிற அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மாட்டத்தில் நேற்று இரவு முதலே இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை பாதையின் பல இடங்களில் சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோத்தகிரி செல்லும் சாலையிலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் மலைப்பாதைகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று காலை ஊட்டியில் இருந்து பர்லியார் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்த போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் அந்த பேருந்து சிக்கி பாதியாக நொறுங்கியது. அதனைத் தொடர்ந்து பேருந்தில் 6 பேரும் பத்திரமாக வெளியே வந்துள்ளனர். தொடர்ந்து, அப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். அங்கு அடுத்தடுத்த இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், ஊட்டி செல்லும் வாகனங்களை மாற்று பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் அந்த சாலை முழுவதையும் நெடுஞ்சாலைத் துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.