எழுதியவர்: சஜு பிலிப்
மூத்த தலைவரான ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரள ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஆளுநர் மாளிகை சமையலறையில் சைவ உணவு மட்டுமே சமைக்கப்பட வேண்டும் என்ற அவரது உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநருக்கு எதிரான அரசியல் ஆயுதத்தை ஆளும் காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான மாத்தூர், ஜூலை 2024-ல் சிக்கிம் ஆளுநரானார். தற்போது கேரளாவில் ராஜேந்திர அர்லேகருக்கு பதிலாக பொறுப்பேற்றுள்ளார். அர்லேகர் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க
ஆளுநர் மாளிகை சமையலறையில் சைவ உணவு மட்டுமே சமைக்கப்பட வேண்டும் என்று மாத்தூர் உத்தரவிட்டுள்ளார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், “கேரளா ஒரு பலதரப்பட்ட உணவு பண்பாட்டைக் கொண்டுள்ளது. மாநில மக்கள் எப்போதும் சைவ மற்றும் அசைவ உணவுகளை உண்பதற்கான சுதந்திரத்தை அனுபவித்து வருகிறார்கள். அவர்களின் உணவுப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும், அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்ற உத்தரவையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய உத்தரவு அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுகிறது. ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனிநபர் சுதந்திரத்தை பறிக்க முயல்கிறார்” என்று தெரிவித்தார்.
இந்த முடிவு சங் பரிவாரின் அரசியலமைப்புக்கு எதிரான நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாகும் என்று வேணுகோபால் கூறினார். “ஆளுநர் தனது சொந்த உணவு விருப்பங்களைப் பின்பற்றலாம். இருப்பினும், அவரது தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப லோக் பவன் சமையலறையின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், லோக் பவன் வட்டாரங்கள் இது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை என்று தெரிவித்துள்ளன. “தன் சமையலறையில் என்ன சமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க ஆளுநருக்கு முழு உரிமை உண்டு. வேணுகோபாலின் சமையலறையில் யார் முடிவு எடுக்கிறார்கள்?” என்று அதிகாரி ஒருவர் கிண்டலாக கூறினார்.
லோக் பவன் சமையலறை ஆளுநருக்கு உணவு சமைப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. ஊழியர்கள் அங்கிருந்து உணவை உட்கொள்வதில்லை. அவர்கள் வீட்டிலிருந்து உணவைக் கொண்டு வருகிறார்கள் அல்லது வெளியில் சாப்பிடுகிறார்கள். ஆளுநரின் சமையலறை அவரது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே உள்ளது. மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் சைவ உணவு உண்பவர் ஆவார்.
ஆளுநர் தனது சொந்த சமையல்காரரைக் கூட்டி வர உரிமை உண்டு என்றும் லோக் பவன் வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னாள் ஆளுநர் அர்லேகர், தனது சொந்த மாநிலத்தின் உணவுகளைத் தயாரிக்க கோவாவிலிருந்து ஒரு சமையல்காரரை வைத்திருந்தார். அர்லேகரின் பதவிக் காலத்தில் லோக் பவனுடன் இணக்கமான உறவைப் பேணி வந்த முதலமைச்சர் வி.டி. சதீசன், இந்த விவகாரம் குறித்து இன்னும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக லோக் பவன் நடத்திய அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில், வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடுவதற்கு சதீசன் ஒப்புதல் அளித்து, ஓர் இணக்கமான அணுகுமுறையைக் குறிப்பதாக அமைந்தது. மறுபுறம், சதீசன் அரசு பா.ஜ.க-விடம் மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக கருதப்படும் விவகாரங்களில் வேணுகோபால் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
கேரள மாநிலம் சந்திக்கும் முதல் உணவு சர்ச்சை இதுவல்ல. 2017- ஆம் ஆண்டு பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கால்நடைகள் விற்பனை குறித்து புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியபோது, காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் ஆகிய இரு கட்சிகளும் நடத்திய ‘மாட்டு இறைச்சி திருவிழாக்கள்’ உட்பட போராட்டங்களை முன்னின்று நடத்தியது கேரளா.
