தமிழகத்தில் அடுத்த பரபரப்பு சம்பவம்; டியூஷன் சென்ற சிறுவன் திடீரென மாயம்!

கடந்த அக்டோபர் 11ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இரண்டாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 8 தனிப்படை அமைக்கப்பட்டு சுமார் 10 நாட்களுக்கு மேலாக அந்த சிறுமியை போலீசார் தேடி வந்தும், தற்போது வரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போல், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஸ்ரீபெரும்புதூரில் தனது தாயுடன் வசித்து வந்த சூழலில், கடந்த அக்டோபர் 16ஆம் தேதி காணாமல் போனார். அதனைத் தொடர்ந்து போலீசார் 5 நாட்களாக தேடிய நிலையில், கடந்த அக்டோபர் 20ஆம் தேதி சென்னை ரயில்வே நிலையத்தில் அவர் போலீசாரால் மீட்கப்பட்டார். ஜார்க்கண்ட் சென்ற தாயைப் பார்ப்பதற்காக ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்னை ரயில்வே நிலையம் வரை தனியாகச் சென்ற சிறுமியை ரயில்வே போலீசார் அரசு காப்பகத்தில் வைத்திருந்தனர். இதையடுத்து ரயில்வே போலீஸின் உதவியுடன் போலீசார் அச்சிறுமியை மீட்டனர்.

தொடர்ச்சியாக சிறுவர்கள் காணாமல் போகும் சம்பவத்தால் தமிழகமே பீதியடைந்துள்ள நிலையில், 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவருடைய மகன் சஞ்சய் (12), அங்குள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்படி படித்து வருகிறார். இந்த சூழலில் நேற்று பள்ளி சென்று வீட்டு டியூஷன் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து சஞ்சய் வெளியே கிளம்பியுள்ளார். ஆனால் அவர் தற்போது வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக சஞ்சயின் பெற்றோர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில், காணாமல் போன சிறுவன் சஞ்சய்யை தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அடையாளம் தெரியாத நபருடன் இரு சக்கர வாகனத்தில் சஞ்சய் லிப்ட் கேட்டு ஏறிச் சென்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து கிடைத்த தகவலின்படி அந்த நபர் யார்? என தீவிரமாக விசாரித்து காணாமல் போன சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.