சத்திரியர்னு சொல்ல பெருமையா இருக்கு: பள்ளியில் சாதி பெருமை? நெஞ்சில் கை வைத்து என்ன சொன்னார் அமைச்சர் கீர்த்தனா? – did minister keerthana express caste pride at a school event backlash grows

தமிழகத்தில் சாதியத் தீண்டாமை மற்றும் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன. சமீபத்தில் கோவையில் மாணவர் ஒருவர் சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவமும், அதைத் தொடர்ந்து எழுந்த விவாதங்களும் தமிழகத்தையே உலுக்கியுள்ளன.

இத்தகைய சூழலில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பள்ளி விழாவில் பேசியதாகக் கூறப்படும் ஒரு காணொளி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதில், “சத்திரியன் என்று சொல்வதற்கும், சத்திரியர் மகளிர் பள்ளியில் படித்தேன் என்று சொல்வதற்கும் பெருமையாக இருக்கிறது” என அவர் நெஞ்சில் கை வைத்துப் பேசியதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இந்தக் காணொளியை முன்வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

என்ன பேசினார் அமைச்சர் கீர்த்தனா?

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்தனா அரசுப் பள்ளியில் படித்தவர் என்று கூறப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளின் வியூக வகுப்பாளராகப் பணியாற்றிய அவர், இளம் வயதிலேயே அமைச்சராகப் பொறுப்பேற்றவர்என்ற அடையாளத்தையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தலைமையேற்றுப் பேசியபோது, “ஒரு சத்திரியன்னு, சத்திரியர் மகளிர் பள்ளியில் படித்தேன் என்று சொல்வதற்கு ரொம்ப ரொம்பப் பெருமையாக இருக்கிறது. நான் மு.க. ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்டோரைப் பார்த்துத்தான் அரசியலுக்கு வந்தேன். அதன்பிறகு அனைத்தையும் தவிர்த்து, இப்போது முழுமூச்சாக அரசியலில் ஈடுபட்டிருக்கிறேன்” என்று அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பேச்சு தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அவர் கூறியதாகச் சொல்லப்படும் வார்த்தைகள் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.

தவறான தகவலா? விளக்கம் என்ன?

அமைச்சர் கீர்த்தனா பள்ளியில் சாதிப் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் பேசினார் என்ற விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அவரது பேச்சின் முழுமையான பின்னணியையும் காணொளியையும் ஆராய வேண்டிய அவசியம் உள்ளது.

சிலர், அமைச்சர் பள்ளியின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசும்போது தவறுதலாக அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும், அவரது பேச்சைத் திட்டமிட்டு சர்ச்சையாக்க வேண்டாம் என்றும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், இந்த விளக்கங்களை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிக்கை அல்லது முழுமையான காணொளி ஆதாரம் கிடைக்காத நிலையில், பேச்சின் நோக்கம் குறித்து உறுதியான முடிவுக்கு வர முடியாது.

தலித் அமைப்புகள் எதிர்ப்பு?

அமைச்சர் கீர்த்தனா ஏற்கெனவே பல்வேறு விவகாரங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது மாணவியிடம் கேள்வி எழுப்பிய விதம், பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வியின்போது அரசியல் பேச வேண்டாம் என்று கூறியதாக எழுந்த சர்ச்சை, இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் தொடர்பான பதிவில் தவறான தேதியைக் குறிப்பிட்டதாக எழுந்த விமர்சனம் உள்ளிட்டவை என பல சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.இந்தச் சூழலில், சாதி தொடர்பாக அவரது பேச்சும் விமர்சனங்களை அதிகரித்துள்ளது. நீலம் பண்பாட்டு மையம் உள்ளிட்ட தலித் அமைப்புகள் மற்றும் சமூக வலைதளச் செயல்பாட்டாளர்கள் இந்த விவகாரம் குறித்து எதிர்வினைகளை பதிவு செய்துள்ளனர்.
பள்ளி நிகழ்ச்சிகளில் சாதி அடையாளங்களை எவ்வாறு கையாள வேண்டும், பொதுவாழ்வில் இருக்கும் தலைவர்கள் பேசும்போது எத்தகைய பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பன போன்ற கேள்விகளும் இந்த விவாதத்தில் முன்வைக்கப்படுகின்றன.

ஏற்கனவே தென் மாவட்டங்களில் தலித் மக்கள் கடுமையான சாதியத் தீண்டாமை, வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரக்கூடிய சூழலில், அமைச்சரின் இந்தப் பேச்சு தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நெஞ்சில் கை வைத்த கீர்த்தனா

முதலில், “சத்திரியன் என்று சொல்வதற்குப் பெருமையாக இருக்கிறது” எனக் கூறி நெஞ்சில் கை வைத்த கீர்த்தனா, உடனே சுதாரித்துக்கொண்டு, சத்திரிய மகளிர் பள்ளியில் படித்தது பெருமையாக இருக்கிறது என மழுப்பலாகப் பேசியதாகவும், அவருக்குள் இருக்கும் சாதிய மனநிலைதான் வெளியில் வந்திருக்கிறது எனவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தம்மீது வைக்கப்படும் அனைத்து விதமான விமர்சனங்களுக்கும் உரிய விளக்கம் அளித்து வரும் அமைச்சர் கீர்த்தனா, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

Source link