கரூர் மாநகராட்சியா அல்லது கண்துடைப்பா? – வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கையற்ற நிர்வாகத்தின் அவல நிலை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மழைநீர் தேங்காமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இதற்கான நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், காகித நகராகவும், முக்கிய தொழில் நகரமாகவும் விளங்கும் கரூர் மாவட்டத்தில நிலவும் கள நிலவரமோ இதற்கு முற்றிலும் மாறாக, அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

மாநகராட்சியா? இல்லை கேள்விக்குறியா?

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், கரூர் நகராட்சி என்பது மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகள் கடந்த பிறகும் கூட, “கரூர் என்பது உண்மையில் மாநகராட்சியா அல்லது வெறும் நகராட்சியா?” என்ற நியாயமான கேள்வி இன்று கரூர் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
காகிதத்தில் மாநகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டதே தவிர, அதற்கேற்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளோ, வளர்ச்சிப் பணிகளோ கரூர் மாநகராட்சியில் எட்டாக்கனியாகவே நீடிக்கின்றன.

தூர்வாரப்படாத கால்வாய்களும், குப்பைக் காடுகளும்

பருவமழை காலங்களில் மழைநீர் எளிதாக வடிந்து செல்வதற்காகச் கால்வாய்களைத் தூர்வாருவது மாநகராட்சி நிர்வாகத்தின் தலையாய கடமையாகும். ஆனால், கரூரைப் பொறுத்தவரை எந்தவித முன்னெச்சரிக்கை விழிப்புணர்வும் இல்லாமல், பல இடங்களில் மழைநீர் செல்லும் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. கால்வாய்கள் பலவும் பிளாஸ்டிக் (நெகிழி) குப்பைகளால் சூழப்பட்டு, காடுகள் போல் மரச்செடிகள் அகற்றப்படாமல் காட்சியளிக்கின்றன.

கடல்போல் காட்சியளிக்கும் சாலைகள்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் எந்தப் பகுதிக்குச் சென்று பார்த்தாலும், லேசான மழைக்கே சாலைகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சியளிப்பது வாடிக்கையாகிவிட்டது. முறையான வடிகால் வசதி இல்லாததால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன.

முகம் சுளிக்கும் அவலம் – உடனடி நடவடிக்கை தேவடடமென கோரிக்கை

நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடப்பதும், கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பதும் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. வெறும் கண்துடைப்புக்காக மட்டுமே மாநகராட்சி இயங்கி வருவதாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் விழிப்புணர்வுகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் வேளையில், கரூர் மாநகராட்சியில் மட்டும் நிர்வாகத்தின் தொய்வு நீடிப்பது கண்டனத்திற்குரியது. எனவே, இனியாவது விழித்துக்கொள்ளும் மாநகராட்சி நிர்வாகம், போர்க்கால அடிப்படையில் துரிதமாகச் செயல்பட்டு, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே கரூரின் ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.