”10 வகுப்பு படித்துவிட்டு கிளினிக் நடத்திய போலி மருத்துவர்கள்”; குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்

பள்ளிப்படிப்பையே முழுமையாக முடிக்காதவர்கள், தங்களை மருத்துவர்கள் எனக் கூறிக்கொண்டு சட்டவிரோதமாக மருத்துவ கிளினிக்குகள் நடத்தி வந்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த 17 போலி மருத்துவர்களை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.  

ராஜ்கோட் மாவட்டத்தின் கிராமப்புற மற்றும் தொழிற்பேட்டை பகுதிகளில் போலி மருத்துவர்கள் அதிகமாக இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த விழாயன் (22-10-26) அன்று காவல் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து பல்வேறு கிளினிக்குகளில் திடீர் சோதனை நடத்தினர்.  

இந்த சோதனையில் மருத்துவப் படிப்பு படிக்காத, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாத பலர் தங்களை மருத்துவர்கள் எனக் கூறிக்கொண்டு சட்ட விரோதமாக கிளினிக் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, 17 போலி மருத்துவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இதில் பெரும்பாலானோர் 10 மற்றும் 12 வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளது தெரியவந்துள்ளது.  

இதனிடையே, கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்களின் கிளினிக்குகளில் இருந்து ஏராளமான அலோபதி மருத்துகள், ஊசிகள், மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், சட்டவிரோதமாக கிளினிக்குகள் நடத்தி வந்த இவர்கள் மீது காவல்துறையினர் பாரதிய நியாய சன்ஹீதா மற்றும் குஜராத் மருத்துவ பயிற்சியாளர்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.