கேரள மாநிலத்தின் புதிய ஆளுநராக ராஜஸ்தானை சேர்ந்த ஓம் பிரகாஷ் மாத்துர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சவுமென் சன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த ஆளுநர் பதவியேற்பு விழாவில், முதல்வர் சதீஷன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பினராயி விஜயன் உட்பட பல அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
ஆளுநராகப் பதவியேற்ற பின்பு அலுவல் பணிகளைத் தொடங்கிய ஓம் பிரகாஷ், ஆளுநர் மாளிகையில் (லோக் பவன்) அசைவ உணவுகளுக்குத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த சம்பவம், கேரள மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளம் கடலோர மாநிலங்களில் ஒன்றாகும். எனவே, இங்கு மீன் என்பது கேரள மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக உள்ளது. இந்நிலையில், ஆளுநரின் இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ஆளுநரின் இந்த அசைவ உணவு தடை உத்தரவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இது தொடர்பாகக் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி.வேணுகோபால் தனது சமூக வலித்தளப்பக்கத்தில், “கேரள மக்களின் உணவு பழக்கவழக்கங்களைத் தடை செய்யவோ? அல்லது அவர்கள் எந்த உண்ண வேண்டும் என்பதைத் தீர்மானிக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. உணவு விஷயத்தில் கூட தலையிட்டு, கேரள மக்களின் தனித்துவமான கூட்டு வாழ்க்கை முறையை அழிக்கும் இது போன்ற உத்தரவுகள் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்” என்று தெரிவித்துள்ளார்.
