தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் வர இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள், வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்தும், மற்ற கட்சிகளை விமர்சித்தும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.
இந்த நிலையில், இந்த தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், மாவட்டம் முழுவதும் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஈரோடு பவானிசாகர் தொகுதியில் போட்டியிடும் தவெக நிர்வாகி தமிழ்ச்செல்வியை ஆதரித்து செங்கோட்டையன் இன்று (11-04-26) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாய் தவறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்ட செங்கோட்டையன், அதன் பின்னர் சமாளித்துகொண்டு பேசினார்.
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது செங்கோட்டையன் பேசியதாவது, “ஈரோடு மாவட்டத்தில் 18 சதவீதம் பேருக்கு கேன்சர் இருக்கிறது என்கிறார்கள். இதை தவிர்க்க வேண்டும் என்றால் இளைய சமூதாயமாக இருக்கிற நீங்கள் தான் ஒரு புரட்சியை உருவாக்க வேண்டும். அந்த புரட்சிதான் தமிழக வெற்றிக் கழகத் தலைவருக்கு இரட்டை இலை சின்னத்தில்” என்று பேசிக் கொண்டிருந்த போது சுதாரித்து கொண்டு, “இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு கேட்டு பழகிட்டேன்” என்று சமாளித்து பேசினார். அதனை தொடர்ந்து பேசிய அவர், “ஜனநாயகன் படம் நேற்று லீக் ஆகியிருக்கிறது. எவ்வளவு கொடுமை? சென்சார் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். எப்படி லீக் ஆனது? இங்கே ஒரு முருகன் இருக்கிறார். அவினாசியில் நான் போய் பேச போகிறேன். முருகப்பெருமான் அங்கே நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார். இங்கே முருகப்பெருமான் நம்மை அழித்துக் கொண்டிருக்கிறார். இது தான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒரு திரைப்படம் வருகிற போது எவ்வளவு தடைகள்? தடையை தகர்த்து எறிந்துவிட்டு திரைப்படத்தை கொண்டு வர முடியாத தவித்துக்க் கொண்டிருக்கிற நேரத்தில் அந்த திரைப்படத்தில் இருக்கிற பல காட்சிகள் வெளியே வருகிறது என்றால் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் தான் சிந்திக்க வேண்டும். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய ஆசை. திருநெல்வேலி பாளையங்கோட்டை தூத்துக்குடிக்கு செல்கிற போது 5 லட்சம் மக்கள் ரோட்டில் வரவேற்ற காட்சி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில மட்டும்தான் நம்முடைய விஜய்க்கு நடந்தது. இதை பார்த்ததற்கு பிறகு, அனைத்து கட்சியும் சேர்ந்தவர்களும் நடுங்கி போயிருக்கிறார்கள், கலங்கி போயிருக்கிறார்கள். நேற்றும் கூட்டத்திற்கு வருகிற போது பத்தே நிமிடம் காலதாமதம் ஆனதால் பேசக்கூடாது என்ற உத்தரவு வந்துவிட்டது. இது இந்தியாவிலே தமிழ்நாட்டில் மட்டும்தான் நடக்கிறது. இவருக்கு மட்டும்தான் 51 விதிகள் இருக்கிறது. மற்றவர் எங்கு வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம், எந்த மணிக்கு வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் நம்முடைய விஜய்க்கு அவ்வளவு விதிகள் போடப்படுகிறது. ஒருபுறம் திரைப்படத்தை வெளியிடப்படாமல் ஆன்லைன் மூலமாக வெளியிடுகிற நிலை, சிபிஐ மூலமாக நெருக்கடி, அவர் எந்த கூட்டத்திற்கும் செல்லக்கூடாது என்ற 51 விதிகள்” என்று பேசினார்.
