”காங்கிரஸ் இல்லையென்றால்… நரேந்திர மோடி பிரதமராகியிருக்க முடியாது…” – முதல்வர் சிவகுமார்

எஸ்.ஐ.ஆர் முறைகேடு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.   

குறிப்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு, ஒரு குறிப்பிட்ட கட்சிக்குச் சார்பான நடைமுறைகளைக் கையாண்டு வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என்று இந்த தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், இந்த போராட்டங்கள் வெளிநாட்டுச் சக்திகளின் தூண்டுதலால் நடைபெற்று வருவதாக பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியைக் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்வதைக் குறிப்பிட்ட அவர், இந்த வெளிநாட்டுப் பயணங்கள் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முயற்சி என்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்குக் காங்கிரஸ் கட்சியினர் கடுமையான கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் கர்நாடக முதல்வர் சிவகுமார், ”காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட வரலாறு உண்டு. காங்கிரஸ் இல்லையென்றால், இந்த நாட்டில் ஜனநாயகம் இருந்திருக்காது என்பது பிரதமருக்குமே தெரியும். நாட்டிற்கு ஜனநாயகத்தை வழங்கிய கட்சி இது. இன்று நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார் என்றால், இந்தியாவின் தலைமைத்துவத்திற்கும், ஜனநாயகத்திற்கும் காங்கிரஸ் கட்சி ஆற்றிய பங்களிப்புதான் காரணம். ஒருவர் தனது வேர்களை மறக்கக்கூடாது.  

ராகுல் காந்தி ஒரு சிறந்த தலைவர். பல வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தினர் அவரை அழைக்கின்றனர். உலகம் முழுவதுமே உற்றுநோக்கும் ஒரு தலைவராக அவர் திகழ்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.