2026 சட்டசபை தேர்தலுக்கு பிறகு திமுகவும், அதிமுகவும் இணைந்து விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை முதலமைச்சராக முயற்சி செய்ததாக எழுந்த சர்ச்சை தற்பொழுது மீண்டும் அரசியல் களத்தில் புயலை கிளப்பியுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மற்றும் தேமுதிகவின் எல்.கே சதீஸ் ஆகியோர் பேசியிருந்த நிலையில் இந்த சர்ச்சை சற்று தணிந்தது. ஆனால் தற்பொழுது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் இந்த விவகாரத்தை பேசி இருப்பது அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்தது. எனினும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியாமல் தவித்தது. இந்த சூழலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், ஐயூஎம்எல், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்து தமிழகத்தில்முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இதற்கிடையே, திமுகவும் அதிமுகவும் ரகசிய கூட்டணி அமைத்து திருமாவளவனை முதலமைச்சராக முயன்றனர் என்ற குற்றச்சாட்டை முதல்வரும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இருக்கக்கூடிய சி.வி சண்முகம் மற்றும் தேமுதிக பொருளாளர் எல் .கே. சதீஷ் ஆகியோர் அதிமுகவும் திமுகவும் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் நாங்கள் ஜென்ம விரோதிகள்.. ஒருபோதும் இணைய மாட்டோம்.. என திமுக- அதிமுக உள்ளிட்ட இரு திராவிட கட்சிகளும் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வந்தன.
இருப்பினும் சட்டமன்றத்தில் இரு கட்சிினரும் அருகருகே அமர்ந்து சிரித்து பேசியதும் சமீபத்தில் தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்டணாய தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக பிரதிநிதிகள் கைகுலுக்கி நட்புறவை வெளிப்படுத்தியது இந்த யூகங்களுக்கு வலு சேர்த்ததாக அமைந்தது.
டிடிவி தினகரனின் சர்ச்சை வாக்குமூலம்
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திமுகவும் அதிமுகவும் எந்தக் காலத்திலும் இணையவே முடியாது; அது பொய் பரப்புரை. ஆனால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நாங்கள் அனைவரும் திருமாவளவனை முதலமைச்சராக்க முயற்சி செய்தோம் என்பது உண்மை. தவெகவால் அதிமுக எம்எல்ஏ-க்கள் இழுக்கப்படுவதைத் தடுக்கவே ஆட்சி அமைக்க முயன்றோம். இதற்குத் தவெகவிடமே ஆதரவு கேட்கலாம் என்று கூட நினைத்தோம்” என அதிரடியாகக் கூறியுள்ளார்.
முன்னுக்குப் பின் முரணான வாதங்கள்
டிடிவி தினகரனின் இந்தக் கூற்று அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களையும் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தியுள்ளது:
கூட்டணிக் கட்சிகளைப் புறக்கணித்தது ஏன்?
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக போன்ற பலமான கட்சிகள் இருந்தன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அல்லது பாஜகவின் முக்கியத் தலைவர்களை விடுத்து, தங்களுக்குச் சம்பந்தமே இல்லாமல் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த விசிக தலைவரை முதல்வராக்க அதிமுக தரப்பு ஏன் முன்னுரிமை அளிக்க வேண்டும்?
திமுக ஆதரவு இன்றி சாத்தியமா?
விசிக தலைவரை முதல்வராக்க வேண்டும் என்றால், திமுகவின் ஆதரவோ அல்லது மறைமுக ஒப்புதலோ இன்றி அது சாத்தியமில்லை. அப்படி இருக்கும்போது, திமுகவுடனான தொடர்பை மட்டும் தினகரன் திட்டமிட்டு மறைக்கப் பார்க்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.
தவெக ஆதரவு தருமா?
108 எம்எல்ஏ-க்களுடன் தனிப்பெரும் கட்சியாக நின்ற தவெக, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களை மட்டுமே கொண்ட விசிகவுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுத்தர எப்படி ஆதரவு அளிக்கும்?
தேர்தல் களத்திலும் அதற்குப் பின்னரும் திமுக தலைமையின் கீழ் செயல்பட்ட விசிகவுக்கு தவெக ஏன் ஆட்சியதிகாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையான கேள்வியும் எழுகிறது.
திடீர் பேச்சின் பின்னணி அரசியல் என்ன?
அரசியலில் முடிந்துபோன இந்த விவகாரத்தை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இப்போது மீண்டும் பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. முதலாவதாக, அமமுகவை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க வேண்டும் என்ற அழுத்தம் நிலவிவரும் சூழலில், தனது அரசியல் எதிர்காலம் குறித்து எந்தவொரு தெளிவான முடிவும் எடுக்க முடியாமல் தினகரன் குழப்பமான மனநிலையில் முரண்பட்ட கருத்துக்களைப் பேசுகிறாரா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இரண்டாவதாக, தற்போது திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுடனும் அதிருப்தியான போக்கில் உள்ள விசிகவை அதிமுக அணியை நோக்கி ஈர்ப்பதற்கான ஒரு மறைமுகத் தூண்டிலா இது என்ற தீவிரக் கேள்வியும் எழுந்துள்ளது. “அன்றே உங்களை முதல்வராக்க நினைத்தவர்கள் நாங்கள்; உங்களுக்கு நாங்கள் என்றும் பக்கபலமாக நிற்போம்” என்ற பிம்பத்தை உருவாக்கி, விசிக தலைவர் திருமாவளவனுக்கு அதிமுக ஆதரவுக் கரம் நீட்டும் அரசியல் உத்தியாகவே தினகரனின் இந்தப் பேச்சு பார்க்கப்படுகிறது. ஆக மொத்தத்தில், பாதி உண்மையும் பாதி முரண்பாடுகளும் நிறைந்த டிடிவி தினகரனின் இந்த திடீர் வாக்குமூலம், முடிந்துபோன பழைய சர்ச்சையை மீண்டும் கிளறிவிட்டுள்ளது. தனது சொந்த அரசியல் இருப்பைத் தக்கவைக்கவும், விசிகவை தங்கள் பக்கம் வளைத்துப் போடவுமே இத்தகைய விவாதங்களை அவர் கையில் எடுத்துள்ளார் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
Source link
