தமிழகத்தின் வட மற்றும் வட உள் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன் சமூகவலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
”திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் இந்த மழையின் தாக்கத்தை அதிகம் சந்திக்கக் கூடும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், ஏற்காடு, கொல்லிமலை, கல்வராயன்மலை மற்றும் ஜவ்வாதுமலை போன்ற மலைப்பகுதிகளில் மிக தீவிரமான மழை பெய்யக்கூடும்.
தெற்கு திசையிலிருந்து வீசும் காற்று காரணமாக, காவேரி டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் இந்த மழையை எதிர்பார்க்கலாம்.
PJ Interpretation of Weather Charts for the Common Man – 24.10.2026
================
1.North / North Interior Tamil Nadu
—————————–
Widespread rainfall is expected across the northern interior districts, with heavy to very heavy rainfall possible at isolated… pic.twitter.com/Vf08Fo5Pj6— Tamil Nadu Weatherman (@praddy06) October 24, 2026
நீலகிரி நிலச்சரிவு எச்சரிக்கை
மேற்கு திசை மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் அதனை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ளூர் அளவில் கூடுதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்யும் என்றாலும், மழையின் தீவிரம் இடத்திற்கு இடம் மாறுபடும். அதே நேரத்தில், குன்னூர் மற்றும் நீலகிரியின் அபாயகரமான மலைச் சரிவுகளில் தீவிரமான மழை பொழிவு இருப்பதனால், நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்பதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தைப் பொறுத்தவரை, கன்னியாகுமரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தெற்குப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிக்கு (KTCC) என்ன நிலவரம்?
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் (KTCC) இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். மேலும், நாளைய தினம் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைக்கு மிகச் சிறந்த நாளாக அமைய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை எவ்வாறு நகர்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒட்டுமொத்தமாக வட உள் மாவட்டங்களும், குன்னூர் – நீலகிரி மலைப்பகுதிகளும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அதேசமயம் டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு பிரதீப் ஜான் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
