மதுரா: மதுரா யமுனை நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 11ஆக உயர்ந்துள்ளது. மேலும், நான்கு பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. விபத்துக்குள்ளான படகு ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் ஜாக்ரான் மற்றும் துக்ரி பகுதிகளைச் சேர்ந்த, 120 பேர் நான்கு நாள் பயணமாக இரண்டு பஸ்களில் உத்தர பிரதேச மாநிலத்துக்கு 9ம் தேதி ஆன்மிக சுற்றுலா சென்றனர். இந்தக் குழு, மதுரா பிருந்தாவனத்துக்கு நேற்று முன் தினம் வந்தது. அதில் பலர் யமுனை நதியில் நேற்று முன் தினம் மதியம் படகு சவாரி செய்தனர்.
சுற்றுலாப் பயணியரை ஏற்றிச் சென்ற படகு, யமுனையின் ஆழமான பகுதியை கடந்த போது, அங்கு மிதந்துகொண்டிருந்த ‘பான்டூன்’ என்ற மிதவைத் தொட்டி மீது மோதி கவிழ்ந்தது.
படகில் இருந்த சுற்றுலா பயணியர் நதியில் மூழ்கினர். தகவல் அறிந்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படை மற்றும் மதுரா போலீசார் விரைந்து வந்தனர்.
நீரில் தத்தளித்த பயணியரை 22 பேரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், 10 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும், ஐந்து பேரை தேடி வந்த நிலையில், நேற்று காலை ஒருவர் உடல் மீட்கப்பட்டது. மீதி, நான்கு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
படகு கவிழ்ந்த இடத்தில் இருந்து, 14 கி.மீ., சுற்றளவுக்கு தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. யமுனை நதிக்குள் விழுந்தவர்கள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு இன்னும் சற்று தூரம் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம். நான்கு பேரை தேடும் பணியில் வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ராணுவத்தின் ‘ஸ்ட்ரைக் ஒன் கார்ப்ஸ்’ வீரர்களும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். படகில் பயணியரை ஏற்றும் முன்பே அவர்களுக்கு உயிர்காக்கும் கவசமான லைப் ஜாக்கெட் வழங்கப்படவில்லை. எனவே, படகு ஓட்டுனர் பப்புவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தால், பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டமே பெரும் சோகத்தில் மூழ்கியது. மதுரா யமுனை நதியில் உயிரிழந்தோர் உடல்கள் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என்ற நிலையில், லூதியானாவின் ஜாக்ரான் நகரில் நேற்று அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மக்கள் பெரும் சோகத்துடன் சாலையோரத்தில் காத்திருந்தனர்.
ஆதம் நகர் தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., குல்வந்த் சிங் சித்து கூறுகையில், “இதுவரை மூன்று உடல்கள் வந்துதுள்ளன. அவர்களுக்கான இறுதிச் சடங்குகள் உடனே நடத்தப்பட்டன. மற்ற உடல்களும் தனித்தனி ஆம்புலன்ஸ்களில் கொண்டு வரப்படுகின்றன,”என்றார்.
