ஆன்மீக தலங்களை இணைக்கும் வகையில் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி வரை இயக்கப்படும் சேது அதிவிரைவு ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி, வரும் 30ஆம் தேதி ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
ரயில்வே நிர்வாகம் சார்பில் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி வரை இரு மார்க்கங்களிலும் வாராந்திர ரயிலாக சேது அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ராமேஸ்வரம், மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வழித்தடங்கள் வழியாக அயோத்தி வரை செல்கிறது. ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத் தலமாக விளங்கும் சிதம்பரத்தில் இந்த ரயில் நின்று செல்லாததால், இப்பகுதி பயணிகள் 50 கி.மீ தூரத்தில் உள்ள கடலூர் அல்லது மயிலாடுதுறை சென்று ரயிலில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் அண்ணாமலைப்பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் ஊழியர்கள், சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு கால விரயமும் தேவையற்ற அலைச்சலும் ஏற்படுகிறது. எனவே, சிதம்பரம் வழியாகச் செல்லும் சேது அதிவிரைவு ரயிலை சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இருப்பினும், ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், சேது அதிவிரைவு ரயிலை சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், மயிலாடுதுறை – கோயம்புத்தூர் இடையே இரு மார்க்கங்களிலும் தினசரி இயக்கப்படும் ஜனசதாப்தி விரைவு ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும், மயிலாடுதுறை – சேலம் மேமு ரயிலையும் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். சேது விரைவு ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30ஆம் தேதி சிதம்பரம் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி, மனிதநேய ஜனநாயக கட்சி, சிதம்பரம் ரயில் பயணிகள் நலச்சங்கம், சிதம்பரம் வர்த்தக சங்கம், சிதம்பரம் தங்கம் மற்றும் வெள்ளி நகை வியாபாரிகள் சங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, இந்திய மாணவர் சங்கம், அனைத்து குடியிருப்போர் நலச் சங்கம், விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம், வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்புகள் பங்கேற்க உள்ளனர்.
