நடிகை த்ரிஷா கடைசியாக ‘கருப்பு’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ராஜா கிருஷ்ணா மேனன் இயக்கத்தில் ஒரு சைக்காலஜிக்கல் ஹாரர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் கைவசம் தெலுங்கில் ‘விஸ்வம்பரா’ மற்றும் மலையாளத்தில் ‘ராம்’ ஆகிய படங்களை வைத்துள்ளார். இந்த இருபடங்களும் ரிலீஸுக்கு தாமதமாகி வருகிறது.
திரைப்படங்களைத் தாண்டி அவ்வப்போது கடை திறப்பு நிகழ்ச்சிகளிலும் த்ரிஷா கலந்து கொண்டு வருகிறார். கடைசியாக கடந்த ஜூலையில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில் கோயம்புத்தூரில் ஒரு கடை திறப்பு விழாவில் சென்றுள்ளார். அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த அவர் செய்தியாளரின் ஒரு கேள்விக்கு ரியாக்ஷன் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த செய்தியாளர் வருங்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே பதில் எதுவும் கூறாமல் காரில் ஏறி சென்றிருந்தார்.
இதையடுத்து கோயம்புத்தூர் 100 அடி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒரு ஃபோன் கடைத் திறப்பு விழாவிற்கு வருகை தந்தார். அவரைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அங்குக் குவிந்திருந்தனர். த்ரிஷாவை பார்த்ததும் அவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் புகைப்படம் எடுக்கவும் முண்டியடித்தனர். இதனால் அங்குச் சற்று பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. பின்பு ரிப்பன் வெட்டி குத்து விலக்கு ஏற்றி கடையைத் திறந்து வைத்தார். தொடர்ந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு விடைபெற்றார்.
