‘தமிழகத்தில் தி.மு.க., இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது,” என, பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை வடக்கு தொகுதியில் பிரசாரம் செய்த அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: கஞ்சா புழக்கம், அரசு பள்ளிகளின் தரம், சாலை உட்பட உட்கட்டமைப்பு வசதிகளின்மை, சாக்கடை பிரச்னை ஆகியவையே, தமிழகத்தில் அதிகம் பேசக்கூடியதாக உள்ளது. இந்த நான்கிலும் தி.மு.க., கோட்டை விட்டுள்ளது.
தே.ஜ., கூட்டணி இதை சரி செய்யும். தி.மு.க.,வினர் ஊழல் குறித்து, நான் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்துள்ளேன். உதாரணத்துக்கு, அமைச்சர் காந்தியின் வேட்டி, சேலை ஊழல். அவரின் ரூ.160 கோடி ஊழல் குறித்து ஆதாரத்துடன் அளித்துள்ளேன். லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., பா.ஜ., அலுவலகம் வந்து என்னிடம் விசாரணை நடத்தி சென்றார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி மாறட்டும். புழல் சிறையில் அவர்களுக்கு தனி ‘பிளாக்’ கட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.
விஜய் ஜெயித்தால் அவரது கட்சி, அ.தி.மு.க.,வுடன் இணைந்துவிடும் என்று மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த தலைவர் ராம்தாஸ் அத்வாலே கூறியது, அவரது சொந்த கருத்து.
தே.ஜ., கூட்டணி 210 இடங்களையும் தாண்டி வெல்லப்போகிறோம். யாருடைய தயவும் வேண்டாம். ‘தி.மு.க., வேண்டாம்; தே.ஜ., கூட்டணிதான் வேண்டும்’ என்று மக்கள் தெளிவாக உள்ளனர்.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோற்றால், கனிமொழி தனி கட்சி; ஸ்டாலின் ஒரு கட்சி; தி.மு.க., யாரிடம் செல்லும் என்று யாருக்குமே தெரியாது. செந்தில் பாலாஜி வாய்ப்பை பார்ப்பார். கனிமொழியிடம் சேர்வதா அல்லது ஸ்டாலினிடம் செல்வதா என்று யோசிப்பார். தே.ஜ., கூட்டணி ஜெயிக்கும் போது, தமிழகத்தில் இனி தி.மு.க., ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது.
இவ்வாறு, அவர் கூறினார்.
